அடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை

0
5

இந்தியாவில் இருந்து ஹாங்காங் வரும் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறி 4-வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது.

அதே சமயம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சில நாடுகள் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் ஹாங்காங் அரசு நிர்வாகம் பிறப்பித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்தியாவில் இருந்து ஹாங்காங் வரும் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறி 4-வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த வார தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் மும்பை ஹாங்காங் விமானத்தில் பயணித்த ஒரு சில பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மும்பை ஹாங்காங் விமானங்கள் இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது” என்றார்