அதிகாரங்களை உருவி எடுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ

0
17

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றமை போல அரசமைப்புக்கான 20வது திருத்தம், ஆளும் தரப்பினால் பெரும் ஆரவாரத்தோடு முன்வைக்கப்பட்டாலும், அது உள்வீட்டுக்குள் பெரும் களேபரத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மை தான் என விடயமறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஏற்கனவே ஜனாதிபதியிடமிருந்த சில முக்கிய நிறைவேற்றதிகாரங்களை அவரிடம் இருந்து நீக்கி, பிரதமரிடமும், அவரின் கீழ் இயங்கும் நாடாளுமன்றத்திடமும், கையளிக்கும் கைங்கரியத்தையே முன்னைய நல்லாட்சி அரசு செய்திருந்தது.

அதை மீள ஜனாதிபதியிடம் திருப்பும் ஏற்பாட்டையே 20வது திருத்தம் கொண்டிருக்கின்றது. வெளிப்படைக்குப் பார்த்தால் நல்லாட்சி அரசு செய்ததை சரிப்பண்ணுகின்றது பொதுஜன பெரமுன அரசு என்பது தான் தோற்றம். ஆனால், விவகாரம் அப்படியல்ல. அதையும் தாண்டி, வேறு பரிமாணங்களைக் கொண்டது இது.

பிரதமரான மஹிந்த ராஜபக்ச வசம் இப்போது இருக்கும் அதிகாரங்கள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, அவரால் ஜனாதிபதி பதவிக்குக் கொண்டு வரப்பட்ட அவரது தம்பியார் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கப்படப் போகின்றன. அதற்கான ஒழுங்குகளைச் செய்யும் அரசமைப்புத் திருத்தம் தான் இந்த 20வது திருத்தச் சட்டமூலம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனிப்புக்கும், பரிசீலனைக்கும், ஆய்வுக்கும், பரிந்துரைக்கும் செல்லாமலேயே அது வர்த்தமானியில் பிரசுரமாகி விட்டமைதான் இப்போதைய உள்வீட்டுப் பரபரப்புகளின் மூலச் சிக்கல் என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்.

அதனால்தான் அந்த 20வது திருத்தச் சட்டத்தைத் தயாரித்தவர் யார், அதன் பின்புலம் யாது என்றெல்லாம் சர்ச்சை கிளப்பப்பட்டது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அதனையே விவகாரமாக எடுத்துக் கொண்டு பிரசாரச் சர்ச்சையை உலவ விட்டது.

20வது திருத்தத்துக்கான வரைவைத் தான் தயாரிக்கவில்லை என்றும், 20வது திருத்தம் என் குழந்தை என்ற சாரப்படவும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவசரப்பட்டு பகிரங்க மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டி வந்ததும் இதனால்தான்.

அண்ணன் – தம்பி அதிகார சர்ச்சையில் தம் தலையை உருட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லைப் போலும்.

தமக்குத் தெரியாமல் அவசர அவசரமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட இருபதாவது திருத்த வரைவு குறித்து ஆராய்வதற்கு அமைச்சர்கள், எம்.பிக்களைக் கொண்ட விசேட குழு ஒன்றை நியமித்து, இரண்டு நாள் அவகாசத்தில் அது குறித்துப் பரிசீலித்து பரிந்துரை சமர்ப்பிக்கும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணித்தமை கூட இந்தப் பின்புலத்தில்தான்.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட இருபதாவது அரசமைப்புத் திருத்த வரைவு குறித்து ஆளும் தரப்புக்குள் பல பிரநிதிகளும் குத்தி முறிந்து, அறிக்கை விட்டு, களேபரம் பண்ணியமை கூட இந்த முரண்பாட்டு நிலைமையின் பின்னணியில்தான்.

ஆனால், அவை எல்லாவற்றுக்கும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரே ஆப்பு வைத்துத் தமது தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட எல்லோரையும் கப் சிப் என அடங்கச் செய்திருக்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

“20வது திருத்த வரைவு என்னால்தான் தயாரிக்கப்பட்டது. நானே அதற்குப் பொறுப்பு. அது திருத்தப்பட மாட்டாது. புதிய வர்த்தமானி அறிவித்தல் ஏதும் விடுவிக்கப்படமாட்டாது.

ஏற்கனவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வடிவத்திலேயே அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஏதேனும் மாற்றம், திருத்தம் செய்ய வேண்டுமானால் அந்த வரைவு மீதான குழு நிலை விவாதத்தில் அதைப் பார்த்துக் கொள்ளலாம்’ – என்ற பாணியில் ஒரு போடு போட்டிருக்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய.

அவ்வளவு தான். 20வது திருத்தத்தில் அது பிழை, இது தவறு, இதனை மாற்ற வேண்டும், அதனை சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் துள்ளிக் குதித்த தரப்புகள் யாவும் சத்தமின்றி அடங்கிப் போயினவாம்.

20வது திருத்த வரைவைப் பரிசீலித்து, ஆராய்ந்து, செய்யப்பட வேண்டிய மாற்றங்களை சிபாரிசு செய்வதற்காக அமைச்சர் மற்றும் ஆளும் தரப்பின் மூத்த தலைவர்களை நியமித்த பிரதமர், அந்தக் குழுவினர் தயாரித்து வழங்கிய விசேட பரிந்துரை அறிக்கையைத் தமது கோவையில் அமைச்சரவைக்கு எடுத்து வந்தாராயினும், ஜனாதிபதியின் திட்டவட்டமான அறிவிப்பை அடுத்து அந்தக் கோவையைத் திறக்கவுமில்லை, அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுமில்லை என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆக, 20வது திருத்தத்தின் தந்தை ஜனாதிபதி கோட்டாபய தான். தமக்குத் தேவையான நிறைவேற்று அதிகாரங்களை நாடாளுமன்றம் மூலம் அவர் பிடுங்கி – உருவி – தோண்டி – எடுக்கப் போகின்றார். அவ்வளவு தான்.

அதற்கு இந்த நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் உதவி, ஒத்துழைத்து, உடந்தையாகி வரலாற்றுத் தவறு இழைக்கப் போகின்றார்களா என்பது தான் இப்போது நம் முன்னால் உள்ள ஒரே கேள்வியாகும்.