அதிக காரமான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

0
11

காரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? சமையலில் மிளகாயை அதிகம் சேர்த்து காரமாக சாப்பிடுவது இந்த பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

காரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? சமையலில் மிளகாயை அதிகம் சேர்த்து காரமாக சாப்பிடுவது மன நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே இந்திய உணவு வகைகளில் காரத்தின் தன்மை சற்று அதிகமாகவே இருக்கும்.

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகாய்தூள், கருப்பு மிளகு உள்பட காரமான மசாலா பொருட்களை கொண்டுதான் இந்திய உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. அவை உணவுக்கு ருசி சேர்த்தாலும் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறது அந்த ஆய்வு. தொடர்ந்து உணவில் காரத்தின் தன்மை அதிகரிக்கும்போது நினைவுத்திறன் பாதிப்பு, சிந்தனை திறன் குறைதல், அல்சைமர் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதிலும் வயதானவர் களுக்கு பாதிப்பின் தன்மை அதிகமாக இருக்கும்.

இந்த ஆய்வுக்கு 55 வயதுக்கு மேற்பட்ட சீனர்கள் 4582 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 50 கிராமுக்கு அதிகமாக உணவில் காரம் சேர்ப்பவர்கள். அவர்களின் அறிவாற்றல் திறன் படிப்படியாக குறைந்து வருவதும் ஆய்வின்போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதிக எடை கொண்டவர்களை விட மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மிளகாயில் உள்ளடங்கி இருக்கும் கேப்சைசின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் தன்மை கொண்டது. கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. எனினும் அதிகம் பயன்படுத்தக்கூடாது என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது. இதுபற்றி கத்தார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜுமின் ஷி, ‘‘எங்கள் முந்தைய ஆய்வுகளில் உடல் எடை, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மிளகாய் நன்மை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வயதானவர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.

கார உணவுகளை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.