அதெல்லாம் பண்ண கூடாதுமா…மகளுக்கு பாடம் எடுத்த ரோகித்…

  0
  13

  இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். பிட்னஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வந்தாலும் அவருடைய மகள் சமைராவுடன் அவர் அதிகளவில் பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய மகள் சமைராவிற்கு அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் கடல்மீது இருக்கும் அன்பு குறித்தும் பாடம் எடுத்துள்ளார்.

  இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா தோல்வியுற்றாலும் 5 சதங்களை குவித்து சாதித்தார். கடந்த மாதத்தில் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் 13வது ஆண்டை இவர் பூர்த்தி செய்துள்ளார்.

  கடந்த 2007ல் ஐயர்லாந்திற்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியை விளையாடிய ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 29 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள அவர், 4 முறை கோப்பையை கைப்பற்றி அந்த அணியை முன்னணியில் வைத்துள்ளார். மேலும் ஐபிஎல்லில் 188 போட்டிகளில் விளையாடி, 4898 ரன்களை குவித்துள்ளார்

  கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், ரோகித் சர்மாவின் பொழுதுகளும் அவருடைய குடும்பத்தினருடன் சிறப்பாக கழிகிறது. குறிப்பாக தன்னுடைய வீட்டின் குட்டி தேவதை சமைராவுடன் அதிகமான பொழுதை போக்கிவரும் ரோகித் சர்மா, அவருடன் தான் இருக்கும் அழகான பொழுதுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

  இந்நிலையில், தன்னுடைய மகளுடன் தான் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரோகித் சர்மா. தன்னுடைய மன்ச்கின்னுடன் தன்னுடைய காலை பொழுது துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக ஸ்ட்ராக்களை பயன்படுத்தக்கூடாது என்றும் கடல்மீது அன்புடன் இருப்பதன் அவசியத்தையும் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.