அழவிடுங்கள்… ஆறுதல் கிடைக்கும்…

0
21
12 / 100

சோகங்கள் நடந்து சில வாரங்கள் ஆகியும் அதில் இருந்து மீள முடியாத மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களுக்கு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்படும்.

சோகங்கள் இப்போது சொல்லிக்கொள்ளாமல் வந்து நிற்கின்றன. சோகத்தால் இழப்புகளை சந்திப்பவர்கள் நொறுங்கித்தான் போவார்கள். சோகத்தால் மனகவலை, பீதி, விரக்தி போன்றவை தோன்றும். அதனால் பசியும், உறக்கமும் இல்லாமல் தவிப்பார்கள். சமூகத்தோடு விலகி இருக்க நினைத்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சோகத்தில் சிக்கிக் கொள்கிறவர்களில் ஒரு பகுதியினர் விரைவாக அதில் இருந்து மீண்டுவிடுவார்கள். இன்னொரு பகுதியினர் தகர்ந்துபோன மனதை சரிசெய்ய அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள்.

சோகத்தில் சிக்கி இருப்பவர்களை மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வர உறவினர்களும், நண்பர்களும் முயற்சிக்க வேண்டும்.

சோகத்தில் இருப்பவர் அழுதால், அதை தடை செய்யவேண்டாம். மனதில் தேங்கிக்கிடக்கும் கவலையையும், வலியையும் கண்ணீரின் வழியாக வெளியேற்றி விடும் போது, அவர்கள் மனதுக்கு அமைதியும், ஆறுதலும் கிடைக்கும். அவர்களை ஆறுதல்படுத்துவதற்காக நிறைய தத்துவங்களை உதிர்க்காதீர்கள்.

அவர்களை எப்போதும் வீட்டிலே முடங்கிக்கிடக்க அனுமதிக்காதீர்கள். அவர்களை வீட்டைவிட்டு வெளியே அழைத்துவர வேண்டும். எல்லா நேரங்களிலும் வீட்டிலே முடங்கிக்கிடப்பது, ஒழித்திருப்பது போன்ற மனநிலையை உருவாக்கிவிடும். வீட்டில் நடக்கும் மகிழ்வான நிகழ்ச்சிகளிலும் அவர்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

மனதை வேறு நிகழ்ச்சிகளில் திசை திருப்பினால் மனதில் இருக்கும் துக்கங்கள் நீங்கும். வேலைக்கு செல்பவராக இருந்தால், முடிந்த அளவு விரைவாக அலுவலகத்திற்கு சென்றுவிடுவது நல்லது. ‘நடந்தது நடந்ததுதான். இனி அதில் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது’ என்று மனதை தேற்றிக்கொண்டு, அடுத்தடுத்த காரியங்களில் கவனத்தை செலுத்த முன்வரவேண்டும்.

சோகங்கள் நடந்து சில வாரங்கள் ஆகியும் அதில் இருந்து மீள முடியாத மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களுக்கு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். அதிக நாட்கள் நிலைத்து நிற்கும் சோக மனநிலைக்கு ‘போஸ்ட்ட்ரோமெட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர்’ என்று பெயர். உற்சாகமின்மை, உறக்கமின்மை வீட்டில் முடங்கிக் கிடத்தல், எதிலும் ஆர்வமின்மை போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

வாழ்க்கையில் தகர்ந்துபோய் இருப்பவர்களை எந்தவிதத்திலும் குற்றம்சாட்டக்கூடாது. அவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லிவையுங்கள். இறப்பையோ, இழப்பையோ சந்தித்தவராக இருந்தால் அவரை ஒருபோதும் வீட்டில் தனிமையில் விட்டுவிடாதீர்கள். இழப்பை சந்தித்தவர் உங்களுக்கு பிடிக்காதவராக இருந்தாலும் அவர் மீது அன்பு செலுத்துங்கள். காயங்கள் ஆறக்கூடியது. அது மனக்காயங்களுக்கும் பொருந்தும்.