இந்தியாவை மீறி 13ஆவது திருத்தத்தில் எவரும் கைவைக்க முடியாது

0
7

இந்தியாவை மீறி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க முடியாது. 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்துவிடலாமென எவரும் பகற்கனவு காணக்கூடாதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

20 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் என்பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயல். பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் கருத்துக்களை செவிமடுக்காது இது திணிக்கப்படுகின்றது.

தங்களிடம் 2/3 பெரும்பான்மை இருக்கின்றதென்பதற்காக 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதனை ஏற்க முடியாது.

13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை அதிலுள்ள மாகாணசபை முறையை தமிழ் மக்கள் ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இதனை ஒழிக்க வேண்டுமெனக் கூறப்படுவதனையிட்டு கவலையடைகின்றோம்.

தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வினையும் வழங்கக் கூடாதென்ற நோக்கத்திலேயே 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முற்படுகின்றனர். தமிழ் அரசியல் தலைவர்களின் பல வருட அரசியல் மற்றும் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்களுக்கு கிடைத்த ஒரு சிறு தீர்வாகவே இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளது.

இதனை ஒழிக்க வேண்டுமென சிங்களப்பேரினவாதிகள் என்னதான் எதிர்ப்புக்குரல் கொடுத்தாலும் இந்தியாவை மீறி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க முடியாது.எனவே 13ஐ ஒழித்துவிடுவோமென எவரும் பகற்கனவு காணக்கூடாது என்றார்.