தீர்க்கதரிசனத்தின் உச்சம்… அரிசிக்காக சிங்கள தேசத்திடம் கையேந்தும் நிலையில் வடக்கு மக்கள்

0
358

இலங்கையின் வட பகுதியின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் கிளிநொச்சியின் நெல் விளைச்சலுக்கு பக்க பலமாகக் காணப்படுவது இரணைமடு குளமேயாகும்.

இக் குளத்துநீர் கண்டாவளை முதல் உருத்திரபுரம் வரை பல்லாயிரக்கணக்கான நெல்வயல்களின் விளைச்சலுக்கு பயன்பட்டுவருகின்றமை யாவரும் அறிந்த ஒன்றே.

இதுமட்டுமல்லாது மேற்கு பகுதியில் கிளி நகர்ப்புறம் முதல் பூநகரி வரையான பல கிராமங்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாகவும் இக்குளமே உள்ளது.

இக்குளத்தின் நீர் மேற்குறித்த இரு தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது குளத்தின் கொள்ளளவு நீர் வருடம் முழுவதும் போதுமாக அமையுமா என்பது கேள்விக்குறியே.

இந்த நிலையில்தான் கடந்த காலங்களில் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்தின் குடிநீர்த்திட்டத்திற்கு கொண்டுசெல்வதை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தடையாக இருந்தாரே தவிர யாழ் மக்கள் மீது குரோத மனப்பாங்கை விளைவிப்பதற்காக அல்ல என்பதை மக்கள் புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.

இத் திட்டத்திற்கு மாற்றுத்திட்டமாகத்தான் தொண்டைமானாறு நன்நீர்த்திட்டம், மருதங்கேணி கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம் என்பவை யாழ் மக்களுக்காக முன்வைக்கப்பட்டதை யாரும் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டனர்.

இரணைமடுக் குளத்துநீர் குடிநீருக்காக முழுமையாகப் பயன்படுத்தும்போது கனகராயன் ஆற்றுநீர் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறாதுவிடின் சிறுபோக நெற்செய்கை கூட பாதிக்கப்படலாம் என்பதே அவருடைய கருத்தாக அமைந்தது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கை பாதிக்கப்படின் வடக்கு மக்களின் நெல் அரிசி தேவையை பூர்த்திசெய்வதற்கு சிங்கள மக்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாய ஆசிரியராக பணியாற்றிய இவருடைய சிந்தனை தூரநோக்குடைய ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கையில் ஈடுபடுபவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பதும் கருத்திற்கொள்ளப்படவேண்டிய ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியிருக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களை யாழ் மாவட்ட மக்களுக்கு எதிரானவராக காட்டி அவரது வாக்கு வங்கியை குறைக்கும் நோக்கில் அவருக்கு எதிரானவர்கள் செயற்படுவது தெள்ளத் தெளிவாக புலப்புடுகின்றது.

-வடக்கின் குடிமகன்-