என்னது காந்தி செத்திட்டாரா? இலஞ்சம் வாங்கும் போது சிக்கிய பொலிஸ் அதிகாரி

0
35

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

எனினும், பழைய செய்தியாகும்.

2018 ஜூலை 10ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பழைய செய்தியை யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் லைக் செய்ய, அது டைம் லைனில் தோன்றியதையடுத்து, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக புதிதாக பகிர்ந்து வருகிறார்கள்.

கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி 2018 ஜூலை 10ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். வாழைச்சேனை – கோரளைப்பற்று பிரதேச சபையில் வைத்து, ரூபா 3 இலட்சம் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வியாங்கொட, கல்குடா பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள, செங்கல் கைத்தொழிற்சாலைக்கான, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மதிப்பீட்டு அறிக்கைக்காக, பொலிசாரினால் அறிக்கையொன்று வழங்கப்பட வேண்டும் என்பதோடு, குறித்த அறிக்கையை வழங்குவதற்காக கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியினால் தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளவரிடமிருந்து இலஞ்சமாக ரூபா 5 இலட்சம் பணம் கோரப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக ரூபா 3 இலட்சத்தை பெற்றுக் கொள்ளும்போதே அவரை இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.