எமது தமிழ் அரசியலும் உப்புமா கதையும்

0
46

கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று குறித்த பெரியளவிலான பிரசாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு குட்டிக்கதை சமூக ஊடகங்களில் மிகவும் அதிகளவில் வைரலாகப் பரவியது.

“ஒரு கல்லூரி விடுதியில் 100 மாணவர்கள் தங்கிப் படித்து வந்தனர். அவர்களுக்கு தினமும் காலையுணவாக உப்பு மா வழங்கப்பட்டது. அதனால் சலித்துப் போன மாணவர்கள், விடுதி காப்பாளரிடம் முறையிட்டனர்.

அவரும் சரி, ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம், உங்களுக்குப் பிடித்த உணவைத் தெரிவு செய்யுங்கள் என்று, ஒரு பட்டியலைப் போட்டுக் கொடுத்தார்.

பொங்கல், பூரி, சப்பாத்தி, என்று வேறு காலையுணவு வகைகள் அதில் இருந்தன. உப்புமாவும் அதில் இடம்பெற்றிருந்த்து.

அந்த விடுதியில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் உப்புமாவை விரும்பாத போதும் அதனை விரும்பி உண்ணும் 20 மாணவர்களும் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் உப்பு மாவையே தெரிவு செய்தனர். ஏனையவர்கள், தாங்கள் விரும்பிய உணவு வகைகளை தெரிவு செய்தனர்.

கடைசியில், உப்பு மாவுக்கே அதிகளவு வாக்குகள் கிடைத்தன.

ஏனைய உணவுகளை விரும்பிய மாணவர்கள் தமக்குள் கலந்தாலோசிக்காமல் தாம் விரும்பியதை தெரிவு செய்தனர். அதனால்  பொங்கல், பூரி, போன்ற ஏனைய உணவுகளுக்கு குறைந்தளவானோரே விருப்பம் தெரிவித்தனர்.

இதனால், 20 பேர் விரும்பிய உப்பு மாவே மீண்டும் காலையுணவாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கதையில் இருந்து புரிந்து கொள்ளக் கூடிய முக்கியமான விடயம், மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பது மட்டும் முக்கியமல்ல, அந்த மாற்றத்தை விரும்புகின்றவர்களை  சரியாக ஒருங்கிணைக்கவும் வேண்டும் என்பது தான்.

இந்தக் கதை, தற்போதைய இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருத்தமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வாக்களித்து எதனைக் கண்டீர்கள், மாற்றம் ஒன்றை உருவாக்குங்கள் என்று பல்வேறு கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

மாற்றத்துக்கு தாங்களே தலைமை தாங்குவதாக பல அணிகள் முண்டியடிக்கின்றன. ஆனாலும், மாற்றம் ஒன்று நடக்குமா இல்லையா என்பதை விட, மாற்றத்துக்கான ஒருங்கிணைப்பு நடந்திருக்கிறதா என்பதே முக்கியமானது.

அந்த ஒருங்கிணைப்பு இல்லாமல் போனால் மீண்டும் உப்பு மாவை சாப்பிடும் நிலை தான் ஏற்படும்.

இந்த விடயத்தில் மாத்திரமல்ல இன்னொரு விடயத்திலும் இந்தக் கதை பொருத்தமானது.

இந்தமுறை  தேர்தலில், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாக்குகளை பலர் இலக்கு வைத்திருக்கிறார்கள்.

வடக்கின் சனத்தொகையில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை துல்லியமாக அறிய முடியாவிடினும், அவர்களின் வாக்குப் பலம் மிகவும் அதிகமானது என்பதில் சந்தேகமில்லை.

எனவே அவர்களின் வாக்குகளை இலக்கு வைத்து பல கட்சிகள், குழுக்கள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில், கை, வீணை, பட்டம், கேடயம், மாம்பழம் போன்ற சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் முக்கிய இலக்காக இருப்பது, இந்த மக்கள் தான்.

இவர்கள் மத்தியில், சமூக நீதியை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், அந்தக் குறிப்பிட்ட ஒரு வட்டத்தை மையப்படுத்தியே செயற்படுகின்றன. பிரசாரம் செய்கின்றன.

சமூக நீதி என்பது எல்லோருக்குமானதே. அவ்வாறான பிரசாரத்தை முன்னெடுக்கும் போது, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அதனை முன்னெடுக்கக் கூடாது.

அந்தப் போராட்டமோ பிரசாரமோ  பரந்துபட்டதாக வெற்றி பெற வேண்டும். அப்போது தான் சமூக நீதி வெற்றி பெறும்.

சமூக நீதியை முன்னிறுத்தி அரசியல் செய்ய முனைபவர்கள் பெரும்பாலும், ஒரு சமூகத்தை மையப்படுத்தி முன்னெடுக்க முனையும் போது, தமிழகத்தைப் போன்று, சாதிய அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தி விடும்.

அவ்வாறான சில சமிக்ஞைகள் வடக்கில் தென்படத் தொடங்கியிருப்பதையும், அதனை ஊக்குவிக்கும் தரப்புகள் மறைமுகமாக இயங்கி வருவதையும்  மறுப்பதற்கில்லை.

இங்கு சில குறிப்பிட்ட சமூகங்களை இலக்கு வைத்து பல கட்சிகள், குழுக்கள் பிரசாரம் செய்தாலும், அதன் மூலம் அந்த சமூகங்களுக்கு என்ன பலன் கிட்டப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

அதாவது, இந்த மக்களின் வாக்குகளுக்காக போட்டியிடும் கட்சிகளுக்கு ஓரிரு ஆசனங்கள் கிடைத்தால், அவர்கள் யாரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பப் போகிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம்.

நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை அனுப்பக் கூடிய பலம் வாய்ந்த மக்கள் கூட்டத்தின் பலத்தை எல்லா கட்சிகளும் சிதைக்கவே முனைகின்றன.

இதன் மூலம், சமூக நீதிக்காக போராடும் மக்கள் கூட்டத்தில் இருந்து யாரும், நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலையே ஏற்படுகிறது.

இங்கும் கூட உப்பு மா கதை முக்கியமானது.

வெற்றிபெறக் கூடியவர்களை தெரிவு செய்வதும், அவர்களுக்காக வாக்களிப்பதும் இத்தகைய சமூகங்களின் முக்கியமான தேவையாக இருக்கிறது.

ஆனால் அவர்கள் அவ்வாறு செயற்படுவதாக தெரியவில்லை.

கட்சிகளினதும் தலைவர்களினதும் தேவைகளுக்காக பிரித்தாளப்படும் நிலையிலேயே இந்த மக்கள் இருக்கிறார்கள்.

இவர்களை சலுகையால் அடிப்பவர்களும் இருக்கிறார்கள். உரிமையைப் பேசி கவிழ்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த இரண்டுக்கும் நடுவே சரியான பிரதிநிதியை தெரிவு செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது தான் முக்கியம்.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தை எப்படி பெற்றுக் கொள்வது என்பதில், ஒருங்கிணைந்த முயற்சியே முக்கியமானது.

அதை விடுத்து, சில்லறைக் கட்சிகளின் சில்லறைகளுக்கு விலைபோகும் நிலை ஏற்பட்டால் சமூக நீதியும் கிட்டாது, நாடாளுமன்ற ஆசனமும் கிடைக்காது.

இப்போதைய நிலையில் தமிழ் அரசியல் பரப்பில், மாற்றத்தை அரசியல் ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ விரும்புபவர்கள் எவராயினும், அதற்கான ஒருங்கிணைப்பை செய்ய வேண்டியதே முக்கியம்.

இல்லையேல், 20 பேர் விரும்புகின்ற உப்புமாவை, அதனை விரும்பாத 80 பேரும் சேர்த்து உண்ணுகி்ன்ற நிலை போன்று தான், அவர்களுக்கும் ஏற்படும்.

தமிழ் அரசியல் பரப்பிலும் அது தான் நடக்கப் போகிறதா?