எவருக்கும் இடமில்லை… ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

0
20

புண்ணிய தளங்களின் வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுக்கு அழிவை ஏற்படுத்துவதற்கு எவர் ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனைத்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பாதுகாப்பதுடன், வெல்லஸ்ஸ உரிமையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (31) மொனராகலை வெல்லவாய பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வேட்பாளர் விமலதாச கல்கமஆரச்சி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க பெறுமதிகொண்ட விகாரைகளை புதையல் திருடர்களிடம் இருந்து பாதுகாத்து தருமாறு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

வெல்லஸ்ஸவின் புராதன பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இயலுமை இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

புதுருவகல மற்றும் பதலஆர குளம் உள்ளிட்ட குளங்களை புனர்நிர்மாணம் செய்வதன் மூலம் விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு பாரியளவு பங்களிப்புச் செய்ய முடியும் என்றும் அங்கு மேலும் சுட்டிக்காட்டினர்.

புராதன உரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி ஒன்றை ஊவா வெல்லஸ்ஸவுக்கும் ஸ்தாபிக்குமாறு வேட்பாளர் பத்ம உதயசாந்த புத்தல சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மொனராகலைக்கு முதலீட்டு வலயமொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை மக்கள் பாராட்டினர்.

வட்டக்காய் மற்றும் தர்பூசனி உள்ளிட்ட உப பயிர்ச் செய்கை உற்பத்தியை ஆரம்பிப்பதற்கும் மிளகு, தோடம்பழம் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பூகோள சரிதவியல் நிபுணரான அதுல சேனாரத்னவிடம் பத்ம உதயசாந்த அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க “புத்தல யபஸ் நிதிய” பற்றி மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

திரு.உதயசாந்த எழுதிய “வெல்லஸ்ஸே சிஹல ஹண்ட” மற்றும் “அதீத உருமயே அநாகத முத்திராவ” கடந்தகால உரிமையின் எதிர்கால முத்திரை என்ற புத்தகம் மற்றும் சஷீந்திர ராஜபக்ஷ இளைஞர் அமைப்பு தயாரித்த யானை – மனித மோதலுக்கு தீர்வு என்ற அறிக்கை ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

வெல்லஸ்ஸவுக்கு உரிய 36 விதை வகைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

வேட்பாளர் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் வேட்பாளர் சுமேதா ஜி ஜயசேன இணைந்து மொனராகலை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி பொதுமக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

மீள் ஏற்றுமதியினால் வீழ்ச்சியடைந்துள்ள மிளகு வியாபாரத்தை முன்னேற்றுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மிளகு வியாபாரிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக பலமான பாராளுமன்றம் ஒன்றை பெற்றுத் தருமாறு ஜனாதிபதி வருகை தந்திருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர் குமாரசிறி ரத்னாயக்க தொம்பகஹவெல வாராந்த சந்தையில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கும்புக்கன் ஒய நீர்வழங்கல் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக வருகை தந்திருந்த மக்களிடம் தெரிவித்தார்.

வேட்பாளர் ஷசி ராமநாயக்க மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

தொலைபேசி சமிக்ஞை குறைபாடு தொடர்பாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். மடுலுமினி ஆரம்ப பாடசாலைக்கு பிரதான மண்டபம் ஒன்றை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிறைவேற்றித் தருவதாக சஷிந்திர ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார்.

எல்.ஏ.கீர்த்திபால உருவாக்கிய வெல்லஸ்ஸவின் புராதன அசிபத்த ஒன்றின் மாதிரி ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மடுல்ல மத்திய மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு மாணவர்கள் சிலர் முன்வைத்த வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் இராணுவ தளபதிக்கு அறிவித்தார்.

நெலும் குளத்தின் வாய்க்காலை அகலப்படுத்துவதற்கும் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் சிற்றூழியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வேட்பாளர் விஜித பேருகொட பிபில கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

மக்கள் சந்திப்புக்கு வருகை தந்திருந்த ஆதிவாசியினர் சிலர் காணி உறுதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை மற்றும் தினசரி செயற்பாடுகளை செய்துகொள்ளும்போது ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

வேட்பாளர் சஷிந்திர ராஜபக்ஷ இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.