ஓர் தனி மனிதனுக்கு அதிகரிக்கப்படும் அதிகாரம் ஆபத்தில்தான் முடியும்… அமெரிக்க அதிபரை விட அதக அதிகாரத்துடன் இலங்கை ஜனாதிபதி

0
93

ஓர் தனி மனிதனுக்கு அதிகரிக்கப்படும் அதிகாரம் ஆபத்தில்தான் முடியும்… அமெரிக்க அதிபரை விட அதக அதிகாரத்துடன் இலங்கை ஜனாதிபதி

ஒரு தனி மனிதனுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

“ 19 ஆம் திருத்தத்தில் சிக்கல்கள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்வதற்கு நாம் ஆதரவை வழங்குவதற்கு தயாராவே இருக்கின்றோம். அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் போது ஏன் 20 ஆம் திருத்தத்தை கொண்டு வந்து தனி மனிதருக்கு அதிகாரங்களை வழங்குகின்றார்கள். அதன் மூலம் எமது நாடு பின்னோக்கி செல்கின்றது.

ஒரு தனி மனிதனுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து. ஜனநாயகத்துக்கு எதிரானதை மேற்கொள்ள வேண்டாமென கூறுகின்றோம்.

கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ பாதயாத்திரை சென்றிருந்தார். அப்போது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பிலான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார்.

1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக வந்ததும் அதிகாரங்களை குறைப்பதாக கூறியிருந்தார். 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஜே.வி.பி.யுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு இணங்கியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன தனது கொள்கை விளக்க உரையிலேயே ஜனாதிபதி முறை நீக்கம் தொடர்பில் தெரிவித்து ஆட்சிக்கு வந்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியை விட இலங்கை ஜனாதிபதிக்கு அதிகாரம் அதிகமாகும். இதனாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அத் திருத்தத்தை சகலரும் ஏற்றுக்கொண்டார்கள். 224 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அரசியலமைப்பு நிர்ணயசபை, சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்றனவும் உருவாக்கப்பட்டன.

ஆனால் மீண்டும் அதிகாரங்களை பறிக்கும் வகையில் 20 ஆவது திருத்தம் அமைந்துள்ளது. இதுவொரு அவசர திருத்தச் சட்டமாகும். 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஓரமாக்கி 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அதனை தோற்கடிப்பதற்கு முயற்சி எடுப்போம் என்றார்.