சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டித்து கறுப்பு கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம்

0
7

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம், சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டித்து கறுப்பு கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஆயிரத்து முன்னூற்றி மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இராணுவத்திடம் சரண் அடையும் போது ஒப்படைத்த தமது சிறுவர்களுக்கு இதுவரை எந்தவித பதிலும் அரசாங்கம் வழங்காத நிலையில் தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இன்றைய சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிப்பதாக தெரிவித்து கறுப்பு கொடிகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்திருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க கட்டிடத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.