சென்னையின் அடுத்த போட்டியிலும் கேதார் ஜாதவ் அணியில் இடம்பெறுவார்..? இதற்காகத்தான் கேதார் ஜாதவ் தொடர்ந்தும் அணியில் சேர்க்கப்படுகிறாராம்!

0
21

கொல்கத்தாவிற்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தது. பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றிபெற்ற சிஎஸ்கே நம்பிக்கையுடன் நேற்று களமிறங்கியது. ஆனாலும் சிஎஸ்கே பேட்டிங் நேற்றைய போட்டியிலும் சொதப்பியது.

நன்றாக ஆடிக்கொண்டு இருந்த சிஎஸ்கே.. கடைசி 10 ஓவரில் மிக மோசமாக பேட்டிங் செய்து தோல்வி அடைந்தது. நேற்று கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நேற்று சிஎஸ்கே தோல்விக்கு கேதார் ஜாதவ் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டார். நேற்று ஜாதவ் 12 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி நேரத்தில் வந்த ஜாதவ் கட்டை போட்ட காரணத்தால் ஆட்டம் சிஎஸ்கே கையை விட்டு போனது. அதிலும் இவர் 19வது ஓவரில் ஆடிய விதம் சிஎஸ்கே ரசிகர்களை கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த போட்டியில் மட்டுமல்ல இதற்கு முன் நடந்த 4 போட்டிகளிலும் சிஎஸ்கே சார்பாக கேதார் ஜாதவ் சரியாக பேட்டிங் செய்யவில்லை. கடந்த 30 போட்டிகளாக கேதார் ஜாதவ் இப்படித்தான் ஆடி உள்ளார். கடந்த 30 போட்டிகளில் ஓவர் ஒரே ஒரு போட்டியில்தான் 30+ ரன்களை எடுத்து உள்ளார். அந்த அளவிற்கு இவர் மோசமான பார்மில் உள்ளார்.

சிஎஸ்கே இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. 4 போட்டிகளிலும் சிஎஸ்கேவின் தோல்விக்கு ஜாதவ் ஒரு வகையில் காரணமாக இருந்தார். நேற்று அழகாக வந்த ஸ்லோ பவுன்சர் பந்துகளை கூட அடிக்க முடியாமல் இவர் கடுமையாக திணறினார். மொத்தமாக இவரின் பேட்டிங் சிஎஸ்கே அணியை அபுதாபி மைதானத்தில் 7 அடிக்கு குழி தோண்டி புதைத்தது.

இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடந்த 3 போட்டிகளாக சிஎஸ்கேவிற்கு கடுமையான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இவரை நீக்கிவிட்டு ஜெகதீசன், சாய் கிஷோர் போன்ற வீரர்களை கொண்டு வரலாம் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தோனி இவரை ஏனோ நீக்குவதற்கு மறுத்து வருகிறார். முரளி விஜயை நீக்கிய தோனி ஜாதாவை நீக்க மறுத்து வருகிறார்.

தோனியின் இந்த செயலுக்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் விஷயம் ஜாதவ் மீது தோனி இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார். ஜாதவ் கடந்த சீசன்களில் சிஎஸ்கேவிற்கு முக்கியமான கட்டங்களில் ரன் எடுத்துள்ளார். காலில் அடிப்பட்டு பெவிலியன் சென்றவர் மீண்டும் திரும்பி வந்து ஆடி சிஎஸ்கேவை வெற்றிபெற வைத்துள்ளார். இப்போது பார்ம் அவுட்டில் இருக்கும் அவரை ஆதரிக்க வேண்டும் என்று தோனி நினைக்கிறார் என்கிறார்கள்.

அதேபோல் அணி நிர்வாகமும் இவரை ஆதரிக்கிறது என்று கூறுகிறார்கள். அணி நிர்வாகத்தின் கடுமையான சப்போர்ட் இவருக்கு உள்ளது. ஏலத்தின் போதே இவரை எடுக்க வேண்டாம் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிஎஸ்கே இவரை எடுத்ததற்கு காரணமே இதுதான் என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் இவரின் பவுலிங் ஆப்ஷன் அவசர காலத்தில் சிஎஸ்கேவிற்கு உதவும் என்று தோனி நினைப்பதாக கூறுகிறார்கள்.

இதில் நான்காவது காரணம் தோனியின் விமர்சகர்கள் கூறும் காரணம் ஆகும். அதன்படி தோனி தனது பேட்டிங் சொதப்பும் போதெல்லாம் பழியை போட ஒரு ஆள் தேவை. அதற்காக வைத்திருக்கும் வீரர்தான் கேதார் ஜாதவ் என்று தோனியை விமர்சிக்கும் நபர்கள் கூறி வருகிறார்கள். இந்த 4 காரணங்களில் எது நியாமான காரணமாக இருந்தாலும் கூட.. சிஎஸ்கே அவரை இனியும் அணியில் வைத்திருக்க வேண்டுமா என்பதை கட்டாயம் யோசிக்க வேண்டும்.