தேர்தல் முடிவடைந்தது… பாடசாலை ஆரம்பம் குறித்த வெளியான முக்கிய தகவல்

0
228

இலங்கையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த நான்காம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மறுதினம் முதல் முழுமையாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 200 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில்,

திங்கட்கிழமை – 1, 2ஆம் வகுப்புக்கள்
செவ்வாய்கிழமை – 2 , 5ஆம் வகுப்புக்கள்
புதன்கிழமை – 3 , 5ஆம் வகுப்புக்கள்
வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை – 4 , 5ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
குறித்த பாடசாலைகளில் ஏனைய வகுப்புக்கள்,

திங்கட்கிழமை – 6 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள்
செவ்வாய்கிழமை – 7 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள்
புதன்கிழமை – 8 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்
வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை – 9 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.
பாடசாலைகளில் ஒரு மீற்றர் இடைவெளியை பேண முடியுமானால் அனைத்து மாணவர்களையும் அழைக்க முடியும் என்பதோடு பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி 6 , 7 , 8 , 9ஆம் தர வகுப்புக்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.30 இற்கு நிறைவடையும். அத்துடன் 10 , 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புக்களுக்கு காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதனால் அனைத்து ஆசிரியர்களும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.