நியூசிலாந்து மசூதிகளில் மக்களை சுட்டுக் கொலை செய்த பயங்கரவாதிக்கு நீதிபதி வழங்கிய அபூர்வ தண்டனை..

0
125

நியூசிலாந்து நாடு அமைதிக்கு பெயர் பெற்ற நாடு, பாதுகாப்பான நாடு என்ற பெயரை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு உலகளாவிய அமைதி குறியீட்டில் உலகின் இரண்டாவது சிறந்த அமைதியான நாடு என அறிவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட நாட்டில் கடந்த ஆண்டு இரு மசூதிகளில் அடுத்தடுத்து ஒரே பயங்கரவாதியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், உலகையே ஒரு சேர அதிரவைத்தன. அங்கு உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி வெள்ளிக்கிழமை நாளில் வழக்கம்போல தொழுகைகள் நடைபெற்று கொண்டிருந்தன.

அப்போது பிரெண்டன் டாரன்ட் என்ற பயங்கரவாதி முதலில் அல் நூர் மசூதிக்குள் தானியங்கி துப்பாக்கியுடன் புகுந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களை சுட்டுத்தள்ளினான். பலரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். அதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாதி அங்குள்ள லின்விட் இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் நுழைந்து, அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி பலரையும் ரத்த வெள்ளத்தில் வீழ்த்தினார்.

இந்த பயங்கரவாத தாக்குதல்களில் 51 அப்பாவி மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 7 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடுகளை நடத்திய பயங்கரவாதி, அவற்றை அப்படியே நேரலையாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உலகையே அதிர வைத்தான்.

அந்த பயங்கரவாதி, ஆஸ்திரேலிய நாட்டின் நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கிராப்டன் நகரை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் (வயது 28) என தெரிய வந்தது. உடனடியாக அவனை போலீசார் கைது செய்தனர். அவன் இந்த துப்பாக்கிச்சூடுகளை நடத்தி விட்டு, மசூதிகளை எரிப்பதையே தனது திட்டமாக வைத்திருந்ததாகவும் விசாரணையின்போது தெரிவித்தான்.

இந்த தாக்குதல் நடந்த நாள், நியூசிலாந்து நாட்டின் கருப்பு நாட்களில் ஒன்று என்று கூறி பிரதமர் ஜெசிந்தா கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த தாக்குதல்களை தொடர்ந்து நியூசிலாந்து நாட்டில் ராணுவத்தினர் பயன்படுத்துவது போன்ற தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

பிரெண்டன் டாரன்ட் மீது கிறைஸ்ட்சர்ச் மாவட்ட கோர்ட்டில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவன் மீது 51 பேரை சுட்டுக்கொலை செய்ததாகவும், 40 பேரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அவன் முதலில் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தான்.

ஆனால் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி சாட்சி விசாரணை தொடங்க இருந்த நிலையில், அதற்கு முன்னதாக அவன் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவன் குற்றவாளி என கோர்ட்டு முடிவு செய்தது. அவனுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை குறித்து 4 நாட்கள் வாதங்கள் நடந்தன.

இந்த நிலையில் அவனுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கேமரூன் மாண்டர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இப்படி ஒரு தீர்ப்பு நியூசிலாந்தில் அளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* தண்டிக்கப்பட்ட பிரெண்டன் டாரன்ட் சாகும் வரை சிறையில்தான் இருந்தாக வேண்டும். பரோல் கிடையாது.

* அவன் நடத்திய தாக்குதல்கள் மனிதாபிமானமற்றவை. அவன்மீது கருணை காட்டவில்லை.

* பிரெண்டன் டாரன்ட் நடத்திய குற்றங்கள், மிகவும் பொல்லாதவை. சாகும்வரை சிறையில் அடைத்தாலும்கூட, அது தண்டனையின் தேவைகளை நிறைவு செய்து விடாது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.