நீங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா? அப்ப இது உங்களுக்கு தான்…

0
5

இன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம். உடல், மனநலத்தை சீராக்கவும் பலமாக்கவும் என்ன செய்வதென்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.

நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான நிறைவான மனம், சிறந்த உடல் எதிர்ப்பு சக்தி போன்றவைகள் எல்லாம் வாழ்வின் வரங்கள். இந்த வரங்கள் ஒருவருக்கு சிறப்பாக அமைந்து விட்டால் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் முழுமையாக அனுபவிக்கவும், வாழ்வின் கஷ்டங்களை தைரியமாக எதிர்கொள்ளவும் பேருதவியாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும். இன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.

அவசயமின்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முழுநேரமும் இருப்பதால் அதிகளவில் உட்கார்ந்து இருப்பதும், நொருக்கு தீனிகளை கொறித்து உடல் எடை அதிகரித்து விடுவதும், மனதில் எரிச்சல், சோர்வு, விரக்தி, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுவதும் சகஜமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம். உடல், மன நலத்தை சீராக்கவும் பலமாக்கவும் என்ன செய்வதென்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.

உடல் நலத்திற்கு

உணவு: உடல் உழைப்பு குறைவாக இருக்க கூடியவர்கள் மாவு சத்து உணவுகளை ஓரளவிற்கு தவிர்த்து புரதம் மற்றும் காய்கறி கீரைவகைகளை பெரிதும் உணவில் சேர்த்து கொள்ளலாம். எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கு பதிலாக நிறைய பழங்களை வெட்டி, தேனோ, உப்பு காரப்பொடி சேர்த்தோ சாப்பிடலாம். நன்கு பசித்த பின் சாப்பிடுவதும் சாப்பாட்டை நன்கு நிதானமாக மென்று சாப்பிடுவதும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்க உதவும்.

உடற் பயிற்சி:- ஏரோபிக்ஸ், யோகாசனம், மொட்டை மாடியில் எட்டு போல் வரைந்த அதில் நடப்பது, தாய்சீ நடனம், ஜீம்பா. நடனம் போன்ற மனதிற்கு பிடித்த உடற்பயிற்சியை தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது செய்வது நல்லது. வீட்டில் சின்ன சின்ன வேலைகளை செய்வதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் கூட மனதிற்கு உற்சாகத்தை கொடுத்து உடல் நலத்தை கூட்டுவதாக அமையும். உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் ‘என்டார் ஃபின்ஸ்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இது நம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்விட்டு சிரித்தால்: தினமும் ஒரு அரைமணி நேரமாவது கார்ட்டூன் பார்ப்பது, நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது என்பதை வழக்கமாக கொள்ளவேண்டும். அல்லது நண்பர்களுடன் மனம் விட்டு பேசி சிரிப்பதும் நல்லது. வாய் விட்டு சிரிக்கும் போது நம் உடலில் என்டார்ஃபின்ஸ் மற்றும் டோபமின்’ ஹார்மோன்கள் சுரக்கின்றன இவை நம் மனதை மகிச்சியாகவும் உற்சாகமாகவும் வைக்க உதவும்.

ஒத்து உதவி வாழ்தல்: வீட்டில் இருக்கும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தன்னால் முடிந்த சிறு உதவிகளை செய்வதும் அவர்களுக்குக்குத் தேவையான தகவல்களை சேகரித்து தருவதும் மற்றவர்களின் சிறு தவறுகளை மன்னித்து அனுசரித்தும் போகும் போது நம் உடலில் செரடோனின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கிறது. இது நம் மனதிற்கு புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்து மனச்சோர்வை போக்குகிறது.

தியானம் செய்தல்: தியானம் செய்யும் போது நம் மனதின் அலைச்சுழல் குறைகிறது. மனம் அமைதியாக இருக்க பழகுகிறது. இதனால் நிறைய வேலைகளை திறமையாக செய்யமுடிகிறது. சிறிய இடத்திலோ, ஒரே இடத்திலோ இருப்பதால் ஏற்படும் விரக்தி மனப்பான்மையை போக்கி, பல புதிய விஷயங்களில் மனத்தை ஈடுபடுத்த இது உதவுகிறது. தியானம் செய்யும் போது சுரக்கும் ‘மெலட்டோனின்’ ஹார்மோன் நம் மனதை அமைதிபடுத்தி இந்த பலன்களை நமக்கு அளிக்கிறது.

எனவே பெரியவர்கள் மட்டுமின்றி வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் மேற்கூறியவற்றை கடைபிடிக்க வைத்தால் குடும்பமே மகிழ்சிச்சியாகவும் குதூகலமாவும் மாறிவிடுவதை உணரமுடியும்.