நேற்று கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

0
16

நாட்டில் நேற்றைய தினம் 106 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் ஈரானில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும், பெலருஸில் இருந்து வந்த 5 பேருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், பங்களதேஸில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானது.

அத்துடன் கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 14 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது.

அதேநேரம், இராஜாங்கனையில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய 6 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 625 கொரோனா நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொவிட் 19 தொற்றுதியான மேலும் ஒருவர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய கண்டி- குண்டசாலையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுதியானதை அடுத்து அவருடன் தொடர்பை பேணிய 100 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜூன் திலகரட்ன எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.