புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் எப்போது? வெளியான புதிய தகவல்

0
277

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான புதிய திகதிகள் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழக்கப் பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இதனால் உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை ஒத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அதற்கமைய கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்தும் பரீட்சைகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. இதன் போது க.பொ.த உயர்தரப்பரீட்சைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையினை செப்டெம்பர் 13 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கமைய உயர்தர பரீட்சைகளை ஆரம்பிப்தற்காக தினம் குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தது.

இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட சுமூகமற்ற நிலைமையைக் கருத்திற் கொண்டு மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் சுகதாரத்துறையினருக்கும் இடம்பெற்ற பரந்துபட்ட கலந்துரையாடலில் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வார காலம் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு நாளைய தினம் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய தினங்களை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.