புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்த வட மாகாண ஆளுநர்

0
5

வடமாகாண வைத்தியசாலைகளை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

துரித அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புற்றளைப் பிள்ளையார் கோவிலடி அமரர் விஜயரட்ணக் குருக்கள், அமரர் சந்திரகுமாரி ஞாபகார்த்தமாக புனரமைக்கப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலுள்ள சிறுவர் மருத்துவ விடுதி கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

எமது நாட்டில் கல்வியும் மருத்துவமும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவை இலங்கையிலுள்ள அனைத்து மக்களாலும் பெறக்கூடியதாக இருக்கின்றது. இதற்காக அரசாங்கம் பல மில்லியன்களை செலவழித்து வருகின்றது. அதிலும் அதிகமான பணம் மருத்துவத் துறைக்கே செலவழிக்கப்படுகின்றது.

இருப்பினும் மக்களின் சுகாதாரக் குறைபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனூடாக மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை முழுமையாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிக்கொண்டிருக்கும் இம் மருத்துவமனையின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இம் மருத்துவமனை மட்டுமல்லாது வட மாகாணத்திலுள்ள இன்னும் சில மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்துதரும்படி ஜனாதிபதியிடம் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

அதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். இந்த மருத்துவமனையின் பல பிரிவுகளை வெளிநாடுகளிலே வசிக்கும் இம் மண்ணின் மைந்தர்கள் நிதி உதவி வழங்கி புனரமைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என ஆளுநர் சார்ள்ஸ் தெரிவித்தார்