போராட்டங்களை நடத்த யாழ்.நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

0
10
50 / 100

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளை வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கியுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பாக தடை உத்தரவு கோரி சுன்னாகம்,மல்லாகம்,வட்டுக்கோட்டை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் தடை உத்தரவை சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா இன்று உடைத்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், நாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

இதனடிப்படையில் பிரதிவாதிகள் முன்னிலையாகாத நிலையில் தடை உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, இன்று இந்தத் தடை உத்தரவு வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா, வி.மணிவண்ணன், வி.திருக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

இதன்போது தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம் கோவிட்-19 நோய்த்தொற்று, சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டால் அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.