மகனை கொன்றவரை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை…

0
107

கும்மிடிப்பூண்டியில் மகனைக் கொன்ற நபரை கூலிப்படையினரை ஏவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் நான்கு பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி ம.பொ.சி., நகரைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லுாரி மாணவன் ஆகாஷ், விமல், திருவொற்றியூரைச் சேர்ந்த சதீஷ் மூன்று பேரும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓட ஓட கொடூரமாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆத்துபாக்கத்தை சேர்ந்த மாதவன் என்பவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடூரமாக அவரின் தலையை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் தலையை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உணவகம் முன்பாக போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் ரயில்வே போலீஸார் தலையை மீட்டு உடலை தேடிய நிலையில், புது கும்மிடிப்பூண்டி பகுதியில் தைலம் தோப்பில் தலையில்லாத உடல், கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். கொடூரமாக மாதவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்றும், ஏற்கனவே அவர் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில்,

தனது மகனும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவனான ஆகாஷை ரவுடி கும்பல் வெட்டி கொன்றதால் ஆட்டோ ஓட்டுனரான அவரது தந்தை ரமேஷ் கூலிப்படையினரை ஏவி மாதவனை கொடூரமாக வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் ,சங்கர், லோகேஷ், விக்ரம் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், மணி என்கிற போண்டா மணி, லவன் குமார், சுரேஷ், கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மகனை கொன்ற நபரை கூலிப்படையை ஏவி பழிக்குப்பழி கொலை செய்த சம்பவத்தில் தந்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிபூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.