மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இதை தினமும் செய்யுங்க!

0
9

வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை தான்.. அதில் அடுத்தவரை கஷ்டப்படுத்தாமல், முடிந்தவரை அடுத்தவரின் கஷ்டத்தை நாம் போக்கி வாழ வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்து போவது இயல்பான ஒன்று தான்.. சில ஆரோக்கிய பிரச்சனைகளும் வந்து போகும்.. அதை எல்லாம் கடந்து வாழ்வது தான் வாழ்க்கை.. குறிப்பாக, ஆரோக்கியம் என்பது நமது உடல் சார்ந்தது மட்டுமல்ல.. நமது உள்ளம் சார்ந்ததும் தான்.. பெரும்பாலன பிரச்சனைகள் மன இறுக்கம், மன கசப்பு போன்றவற்றால் தான் உண்டாகின்றன…!

எனவே நமது உடல் ஆரோக்கியத்தோடு, நமது உள்ள ஆரோக்கியத்தையும் முறையாக கவனித்துக் கொண்டால் தான் நாம் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ முடியும். இந்த பகுதியில் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

உடற்பயிற்சி என்பது நமது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாகும். எனவே நீங்கள் தினசரி காலையில் உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்வதால் உங்களது தினசரி வேலைகளை முன்பை விட மிக கவனமாகவும், தெளிவாகவும் , வேகமாகவும் செய்ய பழக்கப்படுத்திக் கொள்வீர்கள்.. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் கூட, முடிந்த அளவு நடைப்பயிற்சி, லிப்ட்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது, அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் அல்லது நடந்து செல்வது போன்றவற்றை செய்யலாம்.

உணவுகளை கட்டாயம் தவிர்க்காமல் சாப்பிடுங்கள். அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்றவற்றிற்கு தாமதமாகிவிட்டது என்று சாப்பிடாமல் செல்வது கூடவே கூடாது.. ஒவ்வொன்றிற்கும் இந்த இந்த நேரம் என்று தனித்தனியாக ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.

உங்களது வாழ்க்கையில் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் நிறைய இருக்கும்.. எனவே நீங்கள் செய்யும் தேவையற்ற வேலைகள் எது எது என்று கண்டறிந்து அவற்றை செய்யாமல் இருக்கலாம். அல்லது அந்த வேலைக்கான நேரங்களை சுருக்கிக் கொள்ளலாம். உதாரணமாக, டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது போன்றவை…

பெண்களே.. உங்களது வீட்டு வேலைகளின் பட்டியல் எப்போதும் நீண்டு கொண்டே தான் இருக்கும். அதற்காக உங்களது ஓய்வை நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டாம்.. உங்களுக்கு தேவைப்படும் போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் வேலைகளை செய்யுங்கள்.. ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் எப்போதும் களைப்பாகவே இருப்பது, உங்கள் மீதான மற்றவர்களின் கவனத்தை குறைக்கும்.

மகிழ்ச்சியான உரையாடல்கள், சந்தோஷமான தருணங்கள் போன்றவற்றை நீங்கள் தவறவிட வேண்டாம். நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் அவசியமானதாகும்.. எனவே எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.

எப்போதும் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்த நேரம் என்று ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று ஆகும். குறித்த நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லுங்கள். இது மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள மதிப்பை அதிகரிக்கும். மேலும் அந்த அந்த நேரத்தில் அந்தந்த வேலைகளை செய்வதால், பயம், பதற்றம் போன்றவை குறையும்.

டைரி எழுதும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களது மன சஞ்சலங்களை குறைக்கவும், உங்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கவும் உதவும். தினசரி எழுதிய முக்கிய தருணங்களை வார அல்லது மாத இறுதியில் புரட்டி பார்ப்பதால் உங்களது மனம் மகிழ்ச்சியடையும்.

மனதில் ஆசைகள், இலட்சியங்கள் இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் மனதில் பேராசைகளை வளர்த்துக் கொண்டு அவற்றை அடைய முடியாத பட்சத்தில் அது நடக்கவில்லையே என்று இருக்கும் கொஞ்ச நாட்களை வருத்தம் மற்றும் கவலையுடன் கழிக்காதீர்கள்.

உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழ எப்போதும் சுய சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.. நேர்த்தியான உடையானது உங்களை சரும நோய்களில் இருந்து காப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் உங்களது மதிப்பையும் உயர வைக்கும்.

தியானம் செய்வது உங்களது மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன்பும் சில நிமிடங்கள் தியானம் செய்வதால் உங்களது மன சுமைகள் குறைந்து, மன அமைதியாகும். மன இறுக்கம் இல்லாமல் வாழ்வதால் உங்களது நாள் ஆனந்தமான நாளாக அமைவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கையையும் வாழலாம்.

குழந்தைகளுடன் உங்களது குறிப்பிட்ட நேரத்தை செலவழிக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான் குழந்தைகள் அம்மா, அப்பா அன்பிற்கு ஏங்கி போகாமல் இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறு செய்தாலும் உங்களுடைய குழந்தையிடம் மன்னிப்பு கேளுங்கள். குழந்தை ஒரு தவறை உணர்ந்துவிட்டால் அதனை அத்துடன் விட்டு விடுங்கள்.. மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டாதீர்கள்.. உங்களுக்கு பிடித்த அனைத்தும் குழந்தைக்கும் பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எனவே குழந்தைக்கு பிடித்ததையும் கொஞ்சம் செய்யுங்கள். இது அவர்களது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.

உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் இருந்தால் கோவிலுக்கு சென்று வாருங்கள். இது உங்களது மனதை அமைதிப்படுத்தும். உங்களது வாழ்க்கைக்கு நம்பிக்கையையும், ஒரு உறுதியை கொடுப்பதாகவும் அமையும்..