முதன் முறையாக கொரோனாவிற்கு பயந்த அமெரிக்க ஜனாதிபதி

0
12

கொரோனா வைரஸின் பரவல் ஆரம்பத்ததிலிருந்து முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொது வெளியில் முகக் கவசம் அணிந்தவாறு தோன்றியுள்ளார்.

காயமடைந்த வீரர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை சந்திப்பதற்காக வொஷிங்டனிலிருந்து வோல்டர் ரீட் இராணுவ வைத்தியசாலைக்கு சொன்று கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு முகக் கவசத்துடன் காட்சியளித்துள்ளார்.

இதுவரை ட்ரம்ப் பொது வெளியில் முகக் கவசம் அணிந்து தோன்றியதில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சி.டி.சி என்ற அமெரிக்காவின் நோய்களுக்கான கட்டுப்பாட்டு நிலையம், வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் முககவசத்தை பெது வெளியில் கட்டாயம் அணியுமாறு பரிந்துரைத்தது. எனினும் அதன்போது ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், நான் முகக் கவசம் அணியும் நடைமுறையை பின்பற்ற மாட்டேன் என உறுதியாக வலியுறுத்தினார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

அது மாத்திரமன்றி முகக் கவசம் அணிந்தமைக்காக ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடனை கேலி செய்தார்.

இந் நிலையிலேயே அவர் முகக் கவசத்துடன் வெள்ளை மாளிகையிலிருந்து வோல்டர் ரீட் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ட்ரம்ப் இவ்வாறு முகக் கவசத்துடன் பொது வெளியில் தோன்றிய புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க அமெரிக்காவில் தற்போது அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 3.2 மில்லியனையும் கடந்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 3,245,925 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134,777 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.