யாழில் ஊரடங்கு..? முடக்கிவிடப்பட்டுள்ள காதார நடவடிக்கைகளும் விசாரணைகளும்… இதுதான் காரணம்!

0
178

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் பணியாற்றுவதாகவும், அவர்கள் தற்போது ஊர் திரும்பிய நிலையில் புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் புங்குடுதீவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிவருகின்றன.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு புங்குடுதீவு பொலிஸ் பிரிவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு வீடு திரும்பியுள்ள இருவரையும் அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவு 12ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் மினுவாங்கொடையில் இருந்து கடந்த வாரம் ஒருவரும் நேற்று முன்தினம் மற்றொருவரும் புங்குடுதீவில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் இருவரும் பேருந்துகளில் பயணம் செய்திருக்கின்றமையும் தெரியவந்துள்ளது. இதனிடையே ஊர் திரும்பிய பெண்களின் வீட்டுச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாகியுள்ளதுடன் தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் அந்தப் பகுதி அபாய பகுதியாக அறிவிக்கப்படக்கூடும் என்றும், மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.