ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலம் வாய்ந்தது: விராட் கோலி சொல்கிறார்

  0
  4

  2016-ம் ஆண்டு இருந்ததுபோன்ற அணி தற்போது உள்ளது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

  ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் திறமை வாய்ந்த அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) ஆகும். ஆனால் அந்த அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. விராட் கோலி, டி வில்லியர்ஸ் மற்றும் ஏற்கனவே ஆடிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இருந்தும் சாம்பியன் பட்டம் பெற முடியாமல் போனது பரிதாபமே.
  இந்தநிலையில் 13-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலம் வாய்ந்தது என்றும், 2016-ம் ஆண்டு ஆடிய அணிபோல தற்போது உள்ளது என்றும் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
  இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது. 2016-ம் ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நினைவில் நிற்கும் சீசனாக அது அமைந்தது. அப்போது இருந்த அணிபோல் தற்போதைய அணி இருக்கிறது. நான் மிகவும் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன்.
  இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
  ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல் போட்டியில் 2 முறை 2-வது இடத்தை பிடித்தது. 2009-ம் ஆண்டும், 2016-ம் ஆண்டும் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது.
  கடைசியாக விளையாடிய 3 ஐ.பி.எல்.லிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம் மோசமாக இருந்தது. 2017 மற்றும் 2019-ல் கடைசி இடமான 8-வது இடத்தையும், 2018-ல் 6-வது இடத்தையும் பிடித்து இருந்தது.
  தற்போது உள்ள ஆர்.சி.பி. அணியில் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, கிறிஸ் மோரிஸ், ஸ்டெய்ன், இஸ்ரு உதானா, சாஹல், ஆடம் ஜம்பா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள்.