வடக்கு வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்!

0
37

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து மருந்துப் பொருட்கள் களவாடப்பட்டு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடல் வலிக்கு நிவாரணமாக பயன்படுத்தப்படும் மருந்தொன்றே சட்டவிரோதமான முறையில் வெளியே வழங்கப்பட்டுள்ளது. போதைப்பாவனைக்காக அவை வழங்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் நிலவுகிறது.

இது குறித்த உயர்மட்ட விசாணைகள் நடந்து வருவதை தமிழ்பக்கம் அறிந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத ஆளுனர் செயலக அதிகாரியொருவர் இந்த தகவலை உறுதிசெய்தார்.

காயமடைந்தவர்களிற்கு வலி நிவாரணியாக வழங்கப்படும் tramadol என்ற மருந்தே வைத்தியசாலையிலிருந்து வெளியே விநியோகிக்கப்பட்டுள்ளது. கிரமமாக இது வைத்தியசாலையிலிருந்து வெளியே விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இந்த தகவலை வைத்தியசாலையுடன் தொடர்புடைய ஒருவர் வடக்கு ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, ஆளுனர் அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளார்.

இது குறித்த விசாரணைக்கு ஆளுனர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக இடம்பெற்ற விசாரணையில், tramadol வகை மருந்து போலியாக கணக்கு காண்பித்து வைத்தியசாலைக்கு பெறப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. அந்த மருந்துகள் வைத்தியசாலைக்கு வெளியே விநியோகிக்கப்பட்டுள்ளது.

tramadol வகை மருந்து அரச வைத்தியசாலைகளில் மட்டுமே பெறலாம். சாதாரண நபர்கள் பாவித்தால் போதையூட்டும் தன்மையை ஏற்படுத்தும் என்பதால், போதைப்பொருள் பாவனைக்காக வெளியே விநியோகிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் விசாரணைகள் தொடர்கிறது.