விரைவில் டிக்டாக்கிற்கு தடை..? செப்.15 வரை காலக்கெடு – எச்சரிக்கும் டிரம்ப்

  0
  9

  மைக்ரோசாப்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

  சீனாவின் டிக்டாக் ஆப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்காவும் தடை விதிக்க பரிசீலித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் டிக்டாக்கை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

  இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்டாக் நிறுவனத்தை அதன் தாய் நிறுவனமான பைடான்ஸ் விற்க வேண்டும் என்றும் அவ்வாறு விற்கவில்லை என்றால், டிக்டாக் ஆப் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

  மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வார இறுதியில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் டிரம்ப், அமெரிக்க நிறுனத்திற்கு விற்காவிட்டால் உடனடியாக தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

  உளவுத்துறை மற்றும் பிற நோக்கங்களுக்காக சீன அரசாங்கத்தால் அணுகக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய வகையில் பயனர்களின் தனிப்பட்ட தரவை டிக்டாக் சேகரித்து வைத்திருப்பாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. அத்துடன் டிக்டாக் ஆப் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் விசாரணையும் நடந்து வருகிறது.

  இந்நிலையில் மைக்ரோசாப்ட் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளித்து டிரம்ப் கூறுகையில். பாதுகாப்பு காரணங்களுக்காக, சீனாவால் உங்களை கட்டுப்படுத்த முடியாது என்றார். இந்நிலையில் பைட் டான்ஸ் நிறுவனர் ஜாங் யிமிங், பயனாளிகளின் தகவல்கள் சீன அரசுக்கு போவதில்லை என்று மறுத்துள்ளதுடன், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்குமாறு அமெரிக்கா கடும் அழுத்தம் தருவதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்கு நிறுவனத்தின் தலைமையகத்தை பிரிட்டனுக்கு மாற்ற டிக்டாக் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

  இதனிடையே அமெரிக்காவின் மிரட்டலுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அழுத்தம் கொடுத்து டிக் டாக்கை விற்கக் கோரியதற்காக அமெரிக்காவை சீன வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. “தேசிய பாதுகாப்பு என்ற தவறான கருத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது, எந்த ஆதாரமும் வழங்காமல், குற்றத்தை ஊகித்து, தொடர்புடைய நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்களை வெளியிடுகிறது” என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார். இது சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைக்கு எதிரானது என்றும் நியாயத்தன்மை மற்றும் சுதந்திரம் என்று அழைக்கப்படுவதை ஆதரிப்பதில் அமெரிக்காவின் பாசாங்குத்தனம் மற்றும் வழக்கமான இரட்டை நடவடிக்கைககளை அம்பலப்படுத்துகிறது,” என்றும் கூறினார்.