ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் ஹரீன் பொலிஸ் மா முறைப்பாடு…

0
12
11 / 100

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நேற்றைய தினம் அம்பாறையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதியின் நேற்றைய கூற்று தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலானது எனவும், தமக்கு போதுமான அளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபாய நேற்றைய தினம் அம்பாறையில் தம்மை பற்றி வெளியிட்ட கருத்தை தொலைக்காட்சியில் பார்வையிடக் கிட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் ஜனாதிபதியின் முதல் பெயரான நந்தசேன என தாம் விளித்தமை குறித்து அதிருப்தி வெளியிட்டு தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார் என பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத தலைவருடன் தம்மை ஒப்பீடு செய்துள்ளதாகவும், நாடாளுமன்றில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதனை முடக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை எனவும், பயங்கரவாதிகளுக்கு லஞ்சம் வழங்கி தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தாம் ஒரு போதும் தடுத்தது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் வேறும் ஓர் நாட்டின் பிரஜா உரிமை பெற்றுக்கொண்டதில்லை எனவும் பிறந்தது முதல் இந்த இலங்கை மண்ணின் மைந்தன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியை பிடிக்காத வகையில் பேசினால் நாயைப் போன்று கொன்று விடுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஹரீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தமது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தாம் அது குறித்து விமர்சனம் செய்ய தயங்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியின் எச்சரிக்கையை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் இதனால் இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை முதல் பெயரில் விளித்தமைக்கு கோபம் கொண்டுள்ளதாகவும் இதற்கு முன்னதாக பதவி வகித்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்., பிரேமதாச, சந்திரிக்கா, டி.பி மற்றும் சிறிசேன ஆகியோரை அந்தந்த பெயர்களில் விளித்த போதிலும் எவரும் இவ்வாறு கோபித்தது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறையில் ஈடுபடுமாறு பௌத்த தலைவர்கள் கோரியதாக ஜனாதிபதி கூறியது உண்மையா என்பது தமக்கு சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் அவரை விமர்சனம் செய்த அரசியல்வாதிகள, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள் என்ற கசப்பான உண்மையை தாம் நன்கு அறிவதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த 2.8 மில்லியன் மக்களின் குரலாக தாம் நாடாளுமன்றில் குரல் கொடுத்து வருவதாகவும் இதனால் உடனடியாக போதியளவு பாதுகாப்பு தமக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் விக்ரமரட்ன இந்த நாட்டின் பொலிஸ் மா அதிபரேயன்றி அரசியல் தலைவர்களின் உதவியாளர் அல்ல என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், எனவே தமக்கு போதியளவு பாதுகாப்பினை வழங்குவது அவரது தலையாய பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் தற்போதைய பொலிஸ் மா அதிபர் பதவி வகத்த காலத்தில் நடந்ததாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் அரசியல் கருத்துக்களை வெளியிடும் போது அதனை வன்முறையக் கொண்டு நசுக்குவதாக அரசியல் எதிராளியொருவர் முதல் தடவையாக இவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே தமக்கு உரிய வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிதிகளை சபாநாயகர், நாட்டின் வெளிநாட்டு தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.