ஏ9 பிரதான வீதியை மறித்து கிளிநொச்சியில் தொடர் போராட்டம்..

0
6
7 / 100

விடுதலைப் புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று ஒன்று கூடிய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

இதேவேளை கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தினை சீர் செய்ய முற்பட்டனர். எனினும் போக்குவரத்தினை முழுமையாக சீர் செய்ய முடியாத நிலயைில் அதற்கு ஒத்துழைக்குமாறு பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதி ஊடாக போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிசார் போராட்டகாரர்களை வீதியிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும் பொலிசாருக்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் பந்தல் அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர் போராட்டமாக கைதானவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.