130 உலகப் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹக் செய்த 17 வயது இளைஞன் கைது

0
21

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பில்கேட்ஸ் உள்ளிட்ட 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை அண்மையில் ஹக் செய்த சந்தேக நபரான இளைஞனை அதிகாரிகள் கைது செய்தனர். அத்துடன் மேலும் இரு இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

`பிட்கொய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹக் சம்பவத்தில் ஹக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்குகளிலிருந்து ‘பிட்கொய்ன்’ எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் அனுப்புமாறு கோரப்பட்டது.

“எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டொலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டொலர்கள் திரும்பி அனுப்புகிறேன்” என பில்கேட்ஸ் கணக்கிலிருந்து டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.

குறித்த சம்பவம் ஹக் தொழில் வல்லுநர்களின் வேலை என்று சிலர் ஆரம்பத்தில் நினைத்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் மிக உயர்ந்த ஹேக்குகள் ஒன்றின் “சூத்திரதாரி” புளோரிடாவிலுள்ள 17 வயதான உயர்நிலை பாடசாலை பட்டதாரி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

கிரஹாம் இவான் கிளார்க் என்ற குறித்த இளைஞன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரத்திலுள்ள குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு அவர் தனியாக வசித்து வந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசடி உட்பட 30 ஹக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும் வயது வந்தவராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மேசன் ஜோன் ஷெப்பர்ட் மற்றும் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோ நகரைச் சேர்ந்த 22 வயதுடைய நிமா பாசெலி ஆகியோர் மீது கிளார்க்கிற்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.

கிர்க் என்ற பெயரில் சென்ற இந்த தாக்குதலில் மைய நபருக்கு இருவரும் உதவியதாகத் தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.