அஜித் வந்து பார்த்தா என்ன?, பார்க்காவிட்டால் என்ன? – எஸ்.பி.பியின் மகன் விளக்கம்

0
69

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகள் தொடர்பான சர்ச்சை குறித்து அமைந்தகரை எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண், மருத்துவ செலவுகள் தொடர்பாக வதந்தி பரவி வருகிறது. சிகிச்சை பலனின்றி அப்பா காலமாகிவிட்டார். அதிலிருந்து மீண்டு வர நேரம் கொடுக்காமல் தொடர்ந்து புரளி கிளப்பி வருகின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சரண், எம்.ஜி.எம். மருத்துவமனையை நம்பி வந்தோம். எங்களுக்கு ஒன்று என்றால் இந்த மருத்துவமனை நிர்வாகம் எங்கள் பக்கம் நிற்கும். அதிக தொகை மருத்துவ செலவுக்கு ஆனது உள்ளிட்ட அனைத்துமே தேவையில்லாத புரளி. மருத்துவமனை தலைவர் (சேர்மன்) பணம் வாங்க வேண்டாம் என்று உத்தரவிட்டு உடலை பத்திரமாக அனுப்பி வைக்க சொன்னார். அதற்கு இந்த மருத்துவமனைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்

அரசிடம் உதவி கோரி இருந்தோம். அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியிருந்தார்கள் என்றும் கூறினார். மேலும் மருத்துவ செலவிற்கான கட்டனம் கட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை என்று கூறிய எஸ்.பி.பி சரண், எதிர்பாராத மறைவு என்பதால் இதை ஜீரணிக்க காலம் தேவை, குறிப்பாக குடும்பத்தினரான எங்களுக்கு இன்னும் அதிக நேரம் தேவை என்று கூறினார். நினைவு இல்லம் கட்ட வேண்டுமென்ற ஆசை திடீரென தோன்றியது என்று கூறிய சரண், பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் எஸ்.பி.பியின் அடக்கத்திற்கு அரசு தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு தந்ததாகவும், அதற்காக நன்றி செலுத்துவதாகவும் கூறினார்.

அஜித்:

அஜித் வந்து பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அது பிரச்சினை இல்லை. அது குறித்து எந்த கவலையும் இல்லை, அஜித் எனக்கு நண்பர், எனது தந்தைக்கும் நல்ல பரிச்சயமானவர். ஆனால் அதுகுறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்.பி.பி சரண் கூறினார். மேலும் எஸ்.பி.பி. கோரோனாவால் இறக்கவில்லை என்றும் அவர் அதிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் கூறிய சரண், நுரையீரல் தொற்று காரணமாகவே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறந்ததாக குறிப்பிட்டார்.

மருத்துவர் சபா தகவல்:

ECMO, டிராக்கியாஸ்டமி, வெண்டிலேட்டர் உள்ளிட்டவை கிருமித் தொற்றை ஏற்படுத்தும். கடைசி நாட்களில் எஸ்.பி.பிக்கு தொற்று அதிகமானது. மரணமடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் மூளையில் கசிவு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இறுதியாக மாரடைப்பு (கார்டியாக் அரஸ்ட்) ஏற்பட்டு எஸ்.பி.பி இறந்ததாகவும் மருத்துவர் சபா தெரிவித்துள்ளார்.