அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் 9ஆவதாக இணைகிறது புதிய அணி… கங்குலி மாஸ்டர் பிளான்!

0
52

2020 ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிசிசிஐ அடுத்த சீசனுக்கு இப்போதே தயாராகி உள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். அது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் படி 2021 ஐபிஎல் தொடரில் 9 ஐபிஎல் அணிகளை ஆட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடைபெற்றது. இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்தியது பிசிசிஐ. எட்டு ஐபிஎல் அணிகளும் பாதுகாப்பு வளையத்தில் இருந்து போட்டிகளில் பங்கேற்றன.

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த சீசன் ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது. எப்போதும் இல்லாத அளவு அதிக பார்வையாளர்கள் தொலைக்காட்சி மூலம் போட்டிகளை கண்டு களித்தனர். இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் ஐபிஎல் தொடர் வெற்றி பெற்றது.

பிசிசிஐ தலைவர் கங்குலி அடுத்த சீசனுக்கான வேலைகளை இப்போதே தொடங்கி இருக்கிறார். 2021 ஐபிஎல் தொடரை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார். அதற்காக மெகா ஏலத்தையும் நடத்த உள்ளது பிசிசிஐ.

மெகா ஏலம் நடத்த முக்கிய காரணமே கூடுதலாக ஒரு ஐபிஎல் அணி இடம் பெற உள்ளது தான் என்கிறார்கள் இது குறித்து அறிந்த சிலர். ஏற்கனவே, எட்டு ஐபிஎல் அணிகள் உள்ள நிலையில், 2021 ஐபிஎல் தொடரில் ஒன்தாவதாக ஒரு அணியை இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்காகவே மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. எப்படியும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்த வேண்டும். ஆனால், குறுகிய காலத்தில் 2௦21 ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் மெகா ஏலம் நடக்காது என கூறி வந்த நிலையில், தற்போது கங்குலி பிரம்மாண்ட திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

மேலும், இந்த 9 ஐபிஎல் அணிகள் திட்டத்தை கொரோனா வைரஸ் பாதிப்பால் தடுமாறி வரும் நிலையில் பிசிசிஐ கையில் எடுக்க காரணமே நஷ்டத்தை ஈடுகட்டுவது தான் என்கிறார்கள். 2௦20 ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியதில் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதாவதாக ஒரு அணி இடம் பெறப் போகும் விஷயம் மற்ற எட்டு ஐபிஎல் அணிகளுக்கு முன்பே தெரியும் என கூறப்படுகிறது. அதை வைத்தே சில அணிகள் அடுத்த ஆண்டு மெகா ஏலத்துக்கு இப்போதே திட்டமிட்டு வருகின்றன.

எட்டு நகரங்களை மையமாக வைத்து எட்டு ஐபிஎல் அணிகள் இருக்கும் நிலையில், எந்த நகரத்தை வைத்து ஒன்பதாவது அணி உருவாக உள்ளது? என்ற கேள்விக்கு பிசிசிஐ வட்டாரம் அஹமதாபாத்தை கை காட்டுகிறது. அஹமதாபாத் அல்லது குஜராத் என்ற பெயரில் புதிய ஐபிஎல் அணி செயல்படும் என்கிறார்கள்.