அதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யா

0
1
8 / 100

அதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்
அபூர்வ ராகங்கள் திரைப்படம். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இரு பெரும் நட்சத்திரங்களை கொண்ட அப்படத்தில் ‘அதிசய ராகம்’ என்றொரு பாடல். அதில்,
“தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம்…
என்ற வரிகளை எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். அவர் என்ன நினைத்து எழுதினாரோ தெரியாது. ஆனால் அப்பாடலில் நடித்த ஸ்ரீவித்யாவுக்கு கவிஞரின் வரிகள் கச்சிதமாக பொருந்தும்.

கதாநாயகி, குணச்சித்திர நடிகை என 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வெற்றிகரமாக வலம்வந்த ஸ்ரீவித்யாவின் 15வது ஆண்டு நினைவு தினம், இன்று.
பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரி – நடிகர் கிருஷ்ணமூர்த்தி தம்பதியின் மகளான ஸ்ரீவித்யா சிறு வயதிலேயே நடனமும் சங்கீதமும் கற்றுக்கொண்டவர். நாட்டியப்பேரொளி பத்மினியின் குழுவில் இணைந்து பணிபுரிந்தவர். இசைக் கச்சேரிகளுக்காக தாய் அடிக்கடி வெளியூர் சென்றுவிட, கலைதான் ஸ்ரீவித்யாவுக்கு தாயின் அன்பை முழுமையாக தந்திருந்தது. பின்னாளில் அதுவே அவரது வாழ்க்கையாகவும் மாறிப்போனது.

1967ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீவித்யா. தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். அவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம், ‘டெல்லி டூ மெட்ராஸ்’. 1970-களில் கே.பாலச்சந்தர் இயக்கிய நூற்றுக்குநூறு, வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் கதாநாயகி ஸ்ரீவித்யாதான். பின்னாள்களில் ரஜினியின் அம்மாவாக, மாமியாராகவெல்லாம் கூட நடித்தார். அக்காலத்தில் தமிழைப் போலவே மலையாளத்திலும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றினார். அங்கு அவருக்கு சிறந்த கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டன. அதன்மூலம் கேரளாவின் மகளாகவே மாறிப்போனார்.

கலை உலகில் வெற்றிபெற்றாலும் ஸ்ரீவித்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசனை அவர் காதலித்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. பின்னர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண உறவில் மனச்சிக்கல்கள் இருந்ததை தொடர்ந்து, ஜார்ஜிடம் இருந்து விவகாரத்து பெற்றார் ஸ்ரீவித்யா. சிறுவயதில் தனிமையைப் போக்க ஸ்ரீவித்யாவுக்கு உதவிய கலை அவரின் மணமுறிவின் போதும் கைகொடுத்து அவரை நகர்த்தியது. தனிப்பட்ட வாழ்வில் உள்ள சோகங்களை ஓரமாக வைத்துவிட்டு, தனது தொழிலான நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தினார் அவர். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்தார். நல்ல குரல்வளம் கொண்டவர் என்பதால் சில பாடல்களையும் பாடினார் அவர்.

ஸ்ரீவித்யாவின் திரைப்பயணத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தடைக்கல்லாக வந்து சேர்ந்தது, புற்றுநோய். அதன்காரணமாக சினிமாவில் இருந்து விலகிய அவர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். அதனால் கடைசி காலத்தில் யாரையுமே சந்திக்காத ஸ்ரீவித்யா, கமல்ஹாசனை பார்க்க விரும்பினார். அதன்படியே கமலும் அவரை சந்தித்தார். புற்றுநோயுடன் போராடி வந்த ஸ்ரீத்யா 2006ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கேரளாவில் காலமானார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.

ஸ்ரீவித்யா மறைந்த போது கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில் “பொண்ணுக்கு தங்க மனசு… அவள் கண்ணுக்கு நூறு வயசு”… என்ற பாடல் வரிகளை சுட்டிக்காட்டியிருந்தார். அவர் சொன்னதுபோலவே, ஸ்ரீவித்யாவின் அந்தக் கண்களில் இன்றளவும் உயிருள்ளது என்பதில் சந்தேகமேயில்லை. இந்த மண்ணில் இருந்து அவர் மறைந்தாலும் ஆபூர்வ ராகமாய் காற்றில் தவழ்ந்து கொண்டேதான் இருப்பார், என்றென்றும்!