அமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி…

0
63

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 11 அல்லது 12-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என தடுப்பூசி திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 701 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், பல நாடுகளின் நிறுவனங்கள் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பல தடுப்பூசிகள் நல்ல பயனை தருவது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் பைசர் நிறுவனமும்-ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் செயல்திறன் 95 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தங்கள் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அனுமதியளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான எஃப்டிஏ-க்கு பைசர் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கை குறித்து எஃப்டிஏ அமைப்பின் அதிகாரிகள் டிசம்பர் மாதம் 10-ம் தேதி விவாதிக்க உள்ளனர். அந்த கூட்டத்தில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைத்த உடன் 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி கொண்டு செல்லப்படும் என தடுப்பூசி திட்டத்தின் தலைவர் மொன்செஃப் ஸ்லாவ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவில் டிசம்பர் 11 அல்லது டிசம்பர் 12-ம் தேதியில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.