இந்தியாவுக்கு தப்பினாரா தற்கொலை குண்டுதாரியின் மனைவி சாரா ?

0
7

( எம்.எப்.எம்.பஸீர்)

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாராவே, ரோ எனப்படும் இந்திய உளவுத் துறைக்கு, இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான முன் கூட்டிய தகவல்களை வழங்கியிருக்க வேண்டும். அது தொடர்பில் இரகசிய விசாரணைகள் இடம்பெறுகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையை எச்சரித்த இந்திய உளவுத் துறை, பயங்கரவாதி சஹ்ரானின் குழுவின் உள் வட்டத்துக்குள் இருந்தே தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளது என தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாதா அரச உளவுச் சேவையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன. இதன்போதே அரச சட்டவாதியின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு குறித்த அரச உளவுச் சேவை அதிகாரி மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

கல்முனை – சாய்ந்தமருது வெலிவொலிவேரியன் கிராமப்பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் பாதுகாப்பு இல்லமாக கருதப்படும் வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக முதலில் நம்பப்பட்டது. பின்னர் அவர் கொல்லப்படவில்லை என்பது கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளித்த அரச உளவுச் சேவையின் அடையாளத்தை வெளிப்படுத்தாத குறித்த அதிகாரியின் சாட்சியம் சுருக்கமாக வருமாறு:

‘கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடாத்திய குண்டுதாரியான அச்சு முஹம்மது ஹஸ்தூனின் மனைவியே சாரா ஜெஸ்மின் என்பவராவார்.

களுவாஞ்சிக் குடி, தேத்தாதீவு பகுதியில் பிறந்த அவர் ஒரு இந்து. பின்னர் ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாத்தின் தலைவர் அப்துல் ராசிக் ஊடாக அவர் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

சாராவுக்கு இரு தேசிய அடையாள அட்டைகள் இருந்தன. புலஸ்தினி ராஜேந்திரன் எனும் பெயரில் 965672702V எனும் இலக்கத்திலும் , சாரா ஜெஸ்மின் எனும் பெயரில் 199656702702 எனும் இலக்கத்திலும் அந்த அடையள அட்டைகள் இருந்தன.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் பாதுகாப்பு இல்லமாக கருதப்படும் வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக முதலில் நம்பப்பட்டது. எனினும் பின்னர் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகளின் போது அவர் அங்கு உயிரிழக்கவில்லை என தெரியவந்தது.

பின்னர் அவரை தேடுவதற்காக முன்னெடுக்கப்பட்ட உளவு நடவடிக்கையின் போதே, சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் சாராவை கண்டவர்கள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டது. அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்து நான் 2020 மே 31 ஆம் திகதி அதனை அரச உளவுச் சேவையின் தலைமையகத்துக்கு அனுப்பினேன். அந்த அறிக்கை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கலந்துரையாடப்பட்டது தொடர்பிலும் அறிவேன். என சாட்சியமளித்தார்.

இதன்போது கெள்வி எழுப்பிய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இந்தியாவின் ரோ உளவுத் துறை, 2019 ஏப்ரல் 4 மற்றும் 20 ஆம் திகதிகளில் உறுதியான உளவுத் தகவல்கள் ஊடாக எச்சரித்துள்ளது. அத்தகைய தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றிருப்பர்? என வினவினார்.

அதற்கு பதிலளித்த அரச உளவுச் சேவை அதிகாரி,

‘ உண்மையில் தாக்குதலின் பின்னர் நான் தேசிய தெளஹீத் ஜமாத்தின் 97 பேரை விசாரித்தேன். அதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரானின் மனைவி ஹாதியாவும், நெளபர் மெளலவியும் மட்டுமே அது தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தனர்.

அதனால் வெளியில் இருந்த ஒருவர் ஊடாக அவர்கள் தகவல்களைப் பெற்றிருக்க முடியாது. தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட ஒருவர் ஊடாகவே அவர்கள் தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது சி.ஐ.டி.யில் தடுப்புக் காவலில் உள்ள சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்கு மூலத்துக்கு அமைய, இந்த தாக்குதல் தொடர்பில் சாரா ஜெஸ்மின் அனைத்து தகவல்களையும் அறிந்திருந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், ஏப்ரல் 23 ஆம் திகதி நிந்தவூர் வீட்டில் சஹ்ரானின் மனைவியும் சாரா ஜெஸ்மினும் சந்தித்துக்கொண்ட போது, தற்கொலைதாரிகள் சத்தியப் பிரமானம்ச் செய்யும் காட்சிகளை சாரா ஜெஸ்மின் தனக்கு காட்டியதாக சஹ்ரானின் மனைவி ஹாதியா வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவை தனது கணவர் ஹஸ்தூன் ஊடாக தனக்கு கிடைக்கப் பெற்றதாக சாரா அப்போது கூறியதாக சஹ்ரானின் மனைவி தெரிவித்துள்ளார். எனவே ஹஸ்தூன் ஊடாக தாக்குதல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் சாரா பெற்றிருக்கலாம். ‘ என சாட்சியமளித்தார்.

இதன்போது மற்றொரு கேள்வியை எழுப்பிய ஆணைக் குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தனது உளவாளி உயிருடன் இருந்திருந்தால் அவரை பாதுகாப்பாக மீள அழைத்துக்கொள்ள ரோ உளவுச் சேவை நடவடிக்கை எடுத்திருக்குமா? என வினவியது.

இதற்கு பதிலளித்த அரச உளவுச் சேவை அதிகாரி, எந்தவொரு திட்டத்தின் போதும் தனது முகவரை பாதுகாப்பாக மீட்க உளவுத் துறைகளுக்கு ஒரு திட்டம் இருக்கும் என பதிலளித்தார்.