இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது

0
4
8 / 100

இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது” – கமல்ஹாசன் ட்வீட்!

தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஒவ்வொரு முறையும் தாய் மொழி தமிழை புறக்கணித்து இந்தியை திணிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் போர்க் கொடியை உயர்த்துகிறார்கள். “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் எதிரொலித்தது.

இத்தகைய சூழலில் உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோ நிறுவனம் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறியது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை. எனவே சொமேட்டோ வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

மொழி பிரச்சினை இருப்பதாக நிறுவனம் கூற, தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தி இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதற்கு சொமேட்டோ நிறுவனம் “இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம்” என்று பதிலளித்தது சர்ச்சையை கிளப்பியது

சொமேட்டோ நிறுவனத்தின் இந்த பதிலை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் விகாஷ். ஒரு சில மணி நேரங்களிலேயே இந்தியளவில் ட்ரெண்ட் ஆனது. டொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் திடீரென சரிந்ததால், சொமேட்டோ நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்