இலங்கைத் தமிழ்க் குடும்பம் அவுஸ்திரேலிய குடிமக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளது – ஆஸி. உள்துறை அமைச்சர்

0
12

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ்க் குடும்பம் 10 மில்லியன் டொலர் வரி செலுத்துவோர் பணத்தை வீணடித்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டெட்டன், குற்றம் சுமத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ்க் குடும்பம் தொடர்பான வழக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கு முடியும் வரை அவர்களை கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்க அவுஸ்திரேலிய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில், இன்று சிட்னி வானொலி நிகழ்சியொன்றில் பேசிய அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டெட்டன், குறித்த இலங்கை குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2012 முதல் தொடரும் இவ் வழக்கு காரணமாக, அவுஸ்திரேலியாவின் செலவு அநேகமாக 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம்” என்றும் ‘இப் பணம் அவுஸ்திரேலிய குடிமக்களின் வரிப்பணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ‘அவர்கள் அகதிகள் அல்ல, அவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெறுவதற்காக சட்டத்திலுள்ள அனைத்து வழிகளையும் தந்திரத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.

“இது அவர்கள் உருவாக்கிக் கொண்ட நிலைமை, இது நகைப்புக்குரியது, இது அவர்களின் குழந்தைகளுக்கு நியாயமற்றது, மேலும் இது மற்றவர்களுக்கு மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது.” என குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2012 ஆம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 ஆம் ஆண்டு தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தனர்.

அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018 இல் காலாவதியாகியதாக கைதுசெய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலிய அரசினால் அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு.

இந்நிலையில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் தருணிகாவின் தாயார் பிரியாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போதே தருணிகாவுக்கான விசா வாய்ப்பு முடிந்துவிட்டது என நீதிமன்றத்தில் அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸ்டீபன் லாய்ட் தெரிவித்திருந்தார்.

எனினும் இவர்கள் மீதான வழக்கு தொடரும் நிலையில் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.