இலங்கை மக்கள் இரண்டு ஆபத்தான கட்டங்களை எதிர்கொண்டுள்ள…

0
30

இலங்கையை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் மற்றும் முப்படையினரும் கடைமைகளில் ஈடுபட்டுள்ள சந்தர்ப்பத்தில் புரெவி புயல் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டு ஆபத்தான கட்டங்களையும் எதிர்கொள்ளவேண்டிய சூழல் பொதுமக்களுக்கு நேற்று ஏற்பட்டிருந்ததுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை ஊடறுத்த புரெவி புயல் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பாதிப்புக்குள்ளாக்கிய பொதுமக்களைப் பாதுகாப்பாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கவேண்டிய சூழ்நிலையில் கொரோன வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டிய நெருக்கடியான நிலை அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் சுகாதாரப் பிரிவினருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் படையினரால் அமைக்கப்பட்ட வீதி சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் புரவி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதிலும் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள வீதி தடைகளை அகற்றி பொதுமக்களின் போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கையினையும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு வைரஸையும் எதிர்த்து புயலையும் எதிர்த்து போராடும் இலங்கை மக்கள் தொடர் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளமை கவலைக்குரியதுதான்.

மேலும், வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல் இன்று பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத் தாண்டி முன்னேறி மன்னாரைக் கடந்து தமிழகத் திசையை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.