உயர்சாதியினரின் மோட்டார் சைக்கிளை தொட்டதற்காக தலித் இளைஞர் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டார்

0
22

கர்நாடகத்தில் உயர் ஜாதியினரின் மோட்டார் சைக்கிளைத் தொட்டதற்காக தலித் இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக விஜயபுரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுபம் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டம் தலிகொட்டிக்கு அருகில் உள்ள மினாஜ்கி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாத் தல்வார்(32).

அங்கே கூலி வேலை செய்து வருபவர். இவரை கடந்த 18 ஆம் தேதியன்று அதே கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 13 பேர், காசிநாத் தங்களது மோட்டார் சைக்கிளைத் தொட்டு விட்டார் என்று சராமாரியாகத் தாக்கியுள்ளனர். தான் தெரியாமல் தொட்டு விட்டேன் என்று அவர் மன்னிப்புக் கோரியும், அவர்கள் அவரைக் கம்புகளாலும், செருப்பாலும் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

அத்துடன் அவர் அடிதாங்க முடியாமல் சாலையில் விழுந்த போது, அவரது காற்சட்டை அவிழ்த்து அவமானப்படுத்தியுள்ளனர்.

அதைத் தடுக்க வந்த காசிநாத்தின் பெற்றோர் மற்றும் சகோதரியையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக காசிநாத் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதேசமயம் காசிநாத் தங்களைக் கேலி செய்தார் என்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த சில உயர்ஜாதி பெண்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.