உலகத் தரம்வாய்ந்த தபால் சேவைகள் விரைவில் இலங்கையில்… வியாழேந்திரன்

0
15

புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி தபால்சேவையினை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தபால் சேவையை உலக தரம் வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்வது எமது பிரதான இலக்காகும் என்று வெகுசன ஊடக மற்றும் தபால் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுக்கொண்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தபால் சேவையை உலக தரம் வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்வது எமது பிரதான இலக்காகும். புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி துரிதமாக செயற்படும் சேவையாக தபால் சேவை மாற்றியமைக்கப்படும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு செயற்திட்டத்தின் கீழ் இதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டை சகல துறை சார்ந்தும் சுபீட்சத்தின் அடிப்படையில் நாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக தபால் சேவைகள் திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சராக நான் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கின்றேன்.

இந்த நேரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.