ஐ.எஸ்.எல்.: சென்னையின் எப்.சி. வெற்றியுடன் கணக்கை தொடங்குமா?- ஜாம்ஷெட்பூர் அணியுடன் நாளை மோதல்

0
12

ஐஎஸ்எல் கால்பந்தில் சென்னை எப்.சி. தொடக்க ஆட்டத்தில் நாளை ஜெம்ஷெ்ட்பூர் அணியை எதிர்கொள்கிறது. வெற்றியோடு கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 போட்டித் தொடர்  நடைபெற்றுள்ளது. அட்லெடிகோ கொல்கத்தா அணி அதிகபட்சமாக 3 முறை (2014, 2016, 2019-20)  ஐ.எஸ்.எல். கோப்பையை வென்றுள்ளது. சென்னையின் எப்.சி 2 தடவையும் (2015, 2017-18), பெங்களூர் அணி (2018-19) ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
2020-21–ம் ஆண்டுக்கான 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் அங்குள்ள 3 மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்கும் 11 அணிகளும் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அட்லெடிகொ கொல்கத்தா மோகன் பகான், 1-0 என்ற கணக்கில் கேரளா பிளாஸ்டர்சையும், 2-வது ஆட்டத்தில் கவுகாத்தி அணி 1-0 என்ற கணக்கில் மும்பையையும் தோற்கடித்தன.
கோவா- பெங்களூர் அணிகள் மோதிய 3-வது ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 4-வது ஆட்டத்தில் ஒடிசா- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை நாளை இரவு 7.30 மணிக்கு எதிர் கொள்கிறது.
சென்னையின் எப்.சி. வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி கடந்த முறை இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த முறையை போலவே தற்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் சென்னை அணி இருக்கிறது.