கசிப்பு விற்ற தாய் கைது

0
14
8 / 100

நெல்லியடி பொலிஸ் பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமது குடும்ப வியாபாரம் பற்றிய தகவல் கொடுத்தார் என கூறி, அயல் வீட்டு யுவதி மீது தாக்குதல் நடத்திய அவரது மகளும் கைது செய்யப்பட்டார்.

நேற்று (20) இந்த சம்பவம் துன்னாலை, குடவத்தை பகுதியில் நடந்தது.

அந்த பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். வீட்டு மதிலுக்கு வெளியில் நின்று பாத்திரத்தை கொடுப்பவர்களிற்கு கசிப்பை வழங்கி வந்தனர்.

எனினும் பொலிசாரிடம் சிக்காமல் நூதனமாக ‘தொழில்’ செய்து வந்தார். அவரை கைது செய்ய நெல்லியடி பொலிசார் சில முறை முயுற்சி செய்த போதும், அந்த பெண் நூதனமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு, தப்பித்து வந்தார். பொலிசார் வருவதை அறிந்தால், சமையலறை நீர்க்குழாய் தொட்டிக்குள் கசிப்பை ஊற்றிவிட்டு, நீர்க்குழாயையும் திறந்து விடுவார்.

அவர் தொடர்பில் ஏற்கனவேயும் சில வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று அவர் கசிப்பு விற்பனையில் ஈடுபடும் தகவல் பொலிசாருக்கு கிடைத்து, அந்த வீட்டிற்கு சென்றனர். பொலிசாரை கண்டதும், போத்தலில் இருந்த கசிப்பை சமையலறை நீர்தொட்டிக்குள் அவர் ஊற்ற முயன்ற போது, துரிதமாக செயற்பட்ட பொலிசார் கசிப்பை போத்தலை மீட்டனர்.

அந்த பெண்ணை பொலிசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, அவர் பொலிசாரின் வாகனத்தில் ஏற மறுத்து பெரும் இழுபறி ஏற்பட்டது. உறவினர்களும் சூழ்ந்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

எனினும், பெண் பொலிசார் அவரை அள்ளிச்சென்று வாகனத்தில் ஏற்றி விட்டனர். 48 வயதான பெண்ணொருவரே கைதானார்.

இதையடுத்து, கைதானவரின் மகள் அயலிலுள்ள இளம் யுவதியொருவரின் வீட்டுக்கு சென்று, தம்மை காட்டிக் கொடுத்ததாக கூறி, அவரது கழுத்தை நெரித்து, தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கசிப்பு வியாபாரியின் மகளான 25 வயதான குடும்பப் பெண்ணும் பொலிசாரால் கைதானார்.

தாயும், மகளும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.