கடல் மார்க்கமாக இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்க கூடாது

0
11

இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக மன்னார் வழியாக இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்க கூடாது என மன்னார் மாவட்ட கடற்படை அதிகாரிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொடர்பாக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் 14 பேர் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையின் படி எங்களுடைய மாவட்டத்தில் இதுவரை ஆபத்தான நிலமை ஏற்படவில்லை.

மேலும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த விடயம் தொடர்பில் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது கடற்படை அதிகாரிக்கு நான் இறுக்கமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக இங்கே வருவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதிக்க வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

அதற்கு மேலதிகமாக பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம். இவ்விடயம் தொடர்பாக பிரதேச மட்டத்திலும் கூட்டங்களை நடத்துமாறு கோரியுள்ளோம்.

நோய்க்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய தரப்பினருக்கு கோரியுள்ளோம். இதன் போது அனைவரும் இணைந்து செயற்படுவதாக இன்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம்.

இதற்கு மேலதிகமாக நோய்ப் பரம்பல் தற்போது எமது மாவட்டத்தை பொறுத்த வகையில் எதுவும் இல்லாத நிலையில் சந்தேகத்தின் பெயரில் சில தனிமைப்படுத்தும் நிலையங்களில் இராணுவத்தின் உதவியுடன் இயங்க வைத்து வருகின்றோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.