கண்அழுத்தி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

0
26

உடலில் சோர்வு ஏற்படும் போது சிலர் கண்களில் கைகளை வைத்து கசக்குவார்கள். அப்படி கண்களை தேய்ப்பது சரியான வழிமுறை அல்ல. அது கண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உடலில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் அது கண்களில் பிரதிபலிக்கும். அப்போது சிலர் கண்களில் கைகளை வைத்து கசக்குவார்கள். கண்களை தடவி மசாஜ் செய்யவும் செய்வார்கள். கண்களில் தூசு விழுந்தாலோ, அரிப்பு ஏற்பட்டாலோ கண்களை அழுத்தி தேய்ப்பவர்களும் உண்டு. அப்படி கண்களை தேய்ப்பது சரியான வழிமுறை அல்ல. அது கண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கண்களை தொடர்ந்து தேய்த்து கொண்டிருந்தால் விழித்திரை பலவீனமடையக்கூடும். சிலநேரங்களில் அது சிதைந்து போகவும் செய்யும். விழித்திரை திசுக்களை தொடர்ந்து தேய்த்தால் அதன் தன்மை மாறிவிடக்கூடும். இந்தப் பாதிப்பு அதிகமானால் விழித்திரை மாற்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.

கண்களில் தூசுகள் விழுந்தால் எரிச்சல் ஏற்படும். அப்போது கண்களை தேய்க்கத் தூண்டும். பலரும் கண்களை கசக்கினால் தூசு வெளியே வந்துவிடும் என்று கருதி, அழுத்தி தேய்க்கிறார்கள். அது தவறு. அதனால் விழித்திரை சேதமடைந்து விடக் கூடும்.

தூசுகள் வெளியே வந்ததும் சிலர் கண்களை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். ஒருவேளை விழித்திரையில் கீறலோ, சேதமோ ஏற்பட்டிருந்தால் அதை கவனிக்க வேண்டும். கண்களை சரியாக பரிசோதிக்கா விட்டால் புண்கள் தோன்றிவிடும். அது உள்உறுப்புகளுக்குள் பரவினால் பாதிப்பு அதிகமாகிவிடும். சிலருக்கு கண்களில் திரவம் போல் படியத் தொடங்கும். அது கண் அழுத்த நோய்க்கான அறிகுறியாகும். அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் பார்வை நரம்புகளை சேதப்படுத்திவிடும். அதனால் பார்வை இழப்பையும் சந்திக்க நேரிடும்.

கைகளை கொண்டு கண்களை அடிக்கடி தொடவும் கூடாது. தொட்டால் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் கண்களுக்கு பரவிவிடும். அதனால் கண்கள் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறத்தொடங்கும். இந்த மாற்றத்தை உடனே கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். லட்சக்கணக்கானோர் மயோபியா எனப்படும் கிட்டப்பார்வை பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.