கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

0
14

நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும்போது சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. அதுதான் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும். நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
தலைமுடியில் நீண்ட நேரம் எண்ணெய் இருந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறானது. தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.
தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.
தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. கறிவேப்பிலை, வேப்ப இலை, வெந்தயம், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்.
குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும். கனமான, அடர்த்தியான டவல்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது தலைமுடியை விரைவில் சேதப்படுத்திவிடும்.
தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள், திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.
குழந்தைகளை குளிப்பாட்டியதும் தலைக்கு மட்டுமின்றி கழுத்து, முதுகு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தடவி வருவது நல்லது. ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும அழகை மேம்படுத்தும் தன்மை கொண்டவை.
தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் கிருமிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். வியர்வை, நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டெடுத்து சருமத்திற்கு நலம் சேர்க்கும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.