கொரோனாவின் பின்னான புதிய சர்வதேச உறவுகள் ? அதில் ஈழத் தமிழரின் எதிர்காலம் ?

0
10

– மு . திருநாவுக்கரசு
உலகளாவிய அரசியல் போக்கிலும் ( process) , சர்வதேச உறவுகளிலும் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டுசெல்வது இயல்பு. உலக அரசியல் போக்கு என்பது பெருவெட்டானது. அது நீண்ட காலத்துக்குரியது. சர்வதேச உறவுகள் என்பது குறுங்காலத்துக்கு உரியது. அது அவ்வப்போது மாறவல்லது.

உலகளாவிய நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றுப் பெரும் போக்கின் ஒரு முக்கிய போக்காய் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னான உலகளாவிய அரசியல் போக்கு உதயமானது. இந்த முக்கிய அரசியல் போக்கானது காலத்திற்குக் காலம் பெரும் திருப்பங்களை பெற்றுச் செல்கின்றது.

இத்தகைய அரசியல் பெரும் போக்குடன் பல்வேறு நாடுகளினதும் தேவைகள் ( State interests) சங்கமிக்கின்றன. அத்தகைய சங்கமிப்புகள் ஏற்படும் சந்திகளில் சர்வதேச உறவுகள் என்னும் வலைப்பின்னலான முடிச்சுகள் உருவாகின்றன. அதுவே சர்வதேச உறவுகள் ஆகும்.

எனவே உலகளாவிய அரசியல் பெரும் போக்கும் பல்வேறு நாடுகளினது தேவைகளும் சந்திக்கும் முடிச்சுக்கள் சர்வதேச உறவுகள் என்னும் ஒரு பெரும் வலைப்பின்னலைக் கொண்டதாக அமைகின்றது. அதாவது உலகளாவிய அரசியல் பெரும் போக்கு என்னும் பெரும் தெருவில் நாடுகளின் தேவைகள் என்னும் தெருக்கள், குறுக்குத் தெருக்கள், ஒழுங்கைகள், குறுக்கு ஒழுங்கைகள், கை ஒழுங்கைகள் எனப் பல்வேறு தெருக்களும் ஒழுங்கைகளும் இணைந்து சர்வதேச உறவுகள் என்கின்ற ஒரு பரந்த வலைப்பின்னலை உருவாக்கி விடுகின்றன.

உதாரணங்கள் அப்படியே பொருந்தவல்லவை என்று சொல்வதற்கு இல்லையாயினும் இங்கு இதனை விளக்க ஒரு சுமாரான உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகளாவிய நீண்ட நெடிய வரலாற்றுப் போக்குக்கு உதாரணமாக மனிதனையும், உலகளாவிய முக்கிய அரசியற் பெரும் போக்குக்கு உதாரணமாக முதுகெலும்பையும், நரம்பு மண்டலத்திற்கு உதாரணமாக தெருக்கள், குறுக்குத் தெருக்கள் என்பனவற்றையும் ஓரளவு கொள்ளலாம்.

எனவே இத்தகைய நரம்பு மண்டலத் தன்மை வாய்ந்த சர்வதேச அரசியல் உறவுகளை ஒரு சிறந்த மருத்துவர் போல சரிவர வீளங்கியும் தக்க வகையில் கையாள்வதன் மூலமுமே தமிழ் மக்களுக்கான விடிவைக் காணும் பாதையில் முன்னேற முடியும்.
கொரோனாவின் பின்னான காலத்தில் உலகளாவிய அரசியற் பெரும் போக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போக்கை நாம் உடனடியாகச் சரிவர அடையாளம் காண்பது கடினமாயினும் நீண்ட நெடிய வரலாற்றுப் போக்கைப் புரிந்து கொண்டால் இந்த அரசியல் போக்கை ஓரளவு சரியாக உய்த்துணர முடியும்.

இன்றைய உலகளாவிய அரசியற் பெரும் போக்கானது இரண்டாம் உலக மகா யுத்தத்தாலும் அதன் விளைவுகளினாலும் வடிவமைக்கப்பட்டதாகும். எனவே இங்கு எம்மிடம் பெரும் போக்கு பற்றிய அறிவு ஏற்கனவே இருக்கிறது . ஆனால் திருப்பம் பற்றிய அறிவுதானில்லை. இந்நிலையில் திருப்பம் பற்றிய உய்த்துணர்வை வைத்துக்கொண்டு புதிய சர்வதேச உறவுகள் பற்றி ஏறக்குறைய சரியாக மதிப்பிட முடியும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு உலகளாவிய அரசியல் போக்கில் பனிப்போர் ( The Cold war) யுகம் தோன்றியது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் பின்னான காலகட்ட உலகளாவிய பனிப்போர் அரசியலை ஈழத் தமிழ் தலைவர்கள் என்று சொல்லப்படும் எவரும் தெரிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல சர்வதேச உறவுகள் பற்றிய எத்தகைய சிந்தனைகளும் அற்றவர்களாக இருந்துள்ளார்கள்.

ஆனால் இக்காலகட்டத்தில் சர்வதேச உறவுகள் பற்றிய மிகச் சரியான அறிவும், விழிப்புணர்வும் சிங்களத் தலைவர்கள் மத்தியில் மிகத் தெளிவாகவே இருந்துள்ளன. அத்தகைய சர்வதேச அரசியல் அறிவும் அதன் அடிப்படையிலான சரியான அணுகுமுறையும் இல்லாததன் விளைவுதான் இன்று வரை தமிழினம் பேரழிவுக்கு உள்ளாகிவரும் துயரகரமான வரலாற்று வளர்ச்சிப் போக்கின் தொடக்கப் புள்ளியாகும்..

பனிப் போர் கால அரசியலை அதன் தொடக்க நிலையில் உணர்வு பூர்வமாகக் கண்டறிந்து தமிழ் தலைவர்கள் பயன்படுத்தத் தவறினார்களேயானாலும் பின்பு பழக்க தோசத்தால் பனிப்போர் கால அறிவு அவர்களை ஓரளவுக்கு தொற்றிக்கொண்டது உண்மைதான். ஆனால் நடைமுறையில் அதனை அணுகுவதற் கேற்ற ஈடுபாடும், மனப்பாங்கும், திறனும் சிறிதளவுகூடத் தமிழ்த் தலைவர்ளிடம் சிறிதும் காணப்படவில்லை. இத்தகைய நடைமுறை அனுபவத்தில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு கொரோனாவின் பின்னான உலகளாவிய அரசியற் போக்கையும் சர்வதேச அரசியல் உறவுகளையும் சரிவரப் புரிந்துகொண்டு , ஈழத் தமிழர்களின் விடிவுக்கான நடைமுறைச் சாத்தியமான சரியான கொள்கை வகுப்பை செய்தாக வேண்டும்.

எனவே இன்று அறிஞர்களினதும், தமிழ்த் தலைவர்களினதும் பிரதான பணி கொரோனாவின் பின்னான காலகட்டத்திற்குரிய சரியான அரசியல் முன்னெடுப்பு பற்றிய பிரச்சினையாகும்.

கொரோனா தலையெடுத்த போதே அமெரிக்காவின் ஒற்றை மைய உலக அரசியற் தலைமைக்குச் சவாலாக சீனாவின் தலையெடுப்பும் உதயமானது. அந்த வகையில் அமெரிக்க — சீன அரசியல் முரண்பாடே உலகளாவிய அரசியற் போக்கை நினைக்கவல்ல இயங்கு சக்தியாக அமையப் போகிறது.

இது வரலாற்றில் மஞ்சளுக்கு எதிரான வெள்ளை யுத்தம் என்றோ அல்லது மஞ்சள் — வெள்ளை யுத்தம் என்றோ பொருள் கொள்ளப்படும் .

சீனாவின் தரைவழி – கடல்வழி ( Belt and Road) என்ற பட்டுப் பாதை திட்டத்தின்படி பாகிஸ்தானை சீனா தரைவழியாக இணைத்து இந்து சமுத்திரத்தில் பிரவேசித்தது. இது கடல் வழியாக இலங்கையை இணைக்கும். அதனாற்தான் 99 வருட குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எழுதி எடுத்துவிட்டது.

இந்த வகையில் சீனாவின் ஷியான்ஜியாங் ( Xianjiang ) நகரத்திலிருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஃவாதர் துறைமுகம் ( Gwada Port) வரை மிகநீண்ட தரை வழிப்பாதை இணைப்பு உருவாக்கப்பட்டு அது இந்து சமுத்திரத்தின் மையத்திலுள்ள இலங்கைத்தீவுடன் கடல் வழியாக இணைக்கப்படுகிறது.

ஆதலால் சீன — பாகிஸ்தானிய — இலங்கை உறவு என்பது ஓர் அச்சு உறவாக முதல் வட்ட வடிவத்தைப் பெறுகின்றது. இதன் அடுத்த வட்டமாக மியன்மார் — ஈரான் என ஒரு சுருள் வட்டத் தொடர் உருவாகும்.

அதேவேளை அடுத்த முனையில் அமெரிக்கா — இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளென இன்னொரு சுருள் வட்ட உறவுகள் உருவாகும்.
இந்த இரண்டு அணிகளும் முதலில் தமது கணக்கை இலங்கைத் தீவை மையமாகக்கொண்டு தீர்த்துக்கொள்ள முற்படும்.

அண்மையில் லடாக்கில் 20 இந்திய வீரர்களை பலிகொண்ட சீனாவின் தாக்குதல் இந்த வகையில் சீனா தனது புதிய வருகையை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உலகுக்கும் அறிவிக்கும் ஓர் அறிவிப்பாகவே என்பதே இராஜதந்திர மொழியில் பொருள் கொள்ளக்கூகூடிய உண்மையாகூம்.

எடுத்துக்காட்டாக மாஓ சே துங்கின் பின் பதவிக்கு வந்த டெங் ஸியாஓ பிங் தனது புது வருகையை உலகிற்கு அறிவிப்பதற்கு ஏதுவாக 1979 ஆம் ஆண்டு அப்பாவி வியற்னாம் மீது மிருகத்தனமான இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு தனது முஷ்டியை உலகிற்கு உலகிற்கு உயர்த்திக் காட்டினார் என்பதும் இங்கு கவனத்திற்கு உரியது.

இங்கு வெள்ளைக்கும் — மஞ்சளுக்கும் இடையான யுத்தம் என்னும் போது அது வெறுமனே வெள்ளை– மஞ்சள் என்று அமையாது. அது ஒரு பிரதான போக்குத்தான். அதேவேளை வெள்ளையுடன் ஒரு பகுதி மஞ்சளும் இணைய முடியும். உதாரணம் ஜப்பான் , தென்கொரியா தாய்வான். இவ்வாறு காணப்படும் புவிசார் நிலைமைக்கு ஏற்ப பச்சையும் இரு பக்கங்களுக்கும் பிரிய முடியும்.

1990ஆம் ஆண்டைத் தொடர்ந்து பச்சைக்கு எதிரான வெள்ளையின் யுத்தத்தில் ஒரு பகுதி பச்சையும் வெள்ளையுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணலாம். இது மஞ்சளுக்கு எதிரான வெள்ளையின் யுத்தத்திற்கும் பொருந்தும்.
இந்த இரத்தம் சிந்தும் அல்லது இரத்தம் சிந்தா யுத்தத்தில் விஞ்ஞான — தொழில்நுட்பம் என்பன காத்திரமான பாத்திரம் வகிக்கும். கடலை கட்டுப்படுத்துதல் சந்தையை விரிவாக்குதல் என்பன அதற்குரிய பங்கை வகிக்கும். வர்த்தக விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் கடல்– தரை– மக்கள் தொகை என்பன இணைந்த வகையில் கூட்டு பங்கை வகிக்கும்.

நவீனகால விஞ்ஞான — தொழில்நுட்பத்தில் யூதர்களை அச்சாணியாக கொண்டு மேற்குலகமே மூலகர்த்தாவாகத் திகழ்கிறது. இவற்றுக்கு வெளியே விஞ்ஞா ன — தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் விஞ்ஞான – தொழில்நுட்பங்கள் பெருமளவு மேற்படி மேற்குலகின் மைப் பிரதிகளாகவே ( Carbon copies) உள்ளன.

அமெரிக்கா என்னும் ஒரு நாடு வெறுமனே 33 கோடி மக்கள் தொகையைக் கொண்டதானாலும் வட அமெரிக்கக் கண்டம் 57 கோடி மக்களையும் தென் அமெரிக்கக் கண்டம் 43 கோடி மக்களையும் கொண்டதாய் அமெரிக்கக் கண்டங்கள் சுமாராக 100 கோடி மக்கனைக் கொண்டதாய்க் காணப்படுகின்றன. இந்த வகையில் ஒரு நாட்டிற்கு இருக்கக்கூடிய வளங்களை அதனுடைய எல்லைக்குள் மட்டும் பார்க்காமல் அவற்றிற்கு இருக்கக்கூடிய அடிப்படைப் பின்புலங்களில் இருந்தும் பார்க்க வேண்டும்.

இந்த வகையில் கொரோனாவின் பின்னான சர்வதேச உறவுகளைப் புரிந்து கொள்வதிலும் அவற்றுக்கிடையே நடக்கக்கூடிய போட்டிகள் , முரண்பாடுகள் யுத்தங்கள் என்பனவற்றைப் பற்றியும் முன்கூட்டிய அறிவுடனும் கணிப்புடனும் ஈழத் தமிழ் அறிஞர்களும் தலைவர்களும் தமிழ் மக்களுக்கான எதிர் காலத்தைப் பற்றி சரிவர திட்டமிட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் இது விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேற்படி இரண்டு அணிகளில் ஓர் அணியின் பக்கம் மட்டும்தான் ஈழத் தமிழருக்கு இடமுண்டு. அதுவுங்கூட கைவீசி நடக்கவல்ல ஓர் அழுத்தமான , சொகுசான வீதியாக அமையும் என்று சொல்வதற்கில்லை. ஆயினும் சாத்தியமான வீதியால் — அது கல்லும் முள்ளும் நிறைந்ததாயினும் அதனைத் தாண்டித்தான் நடக்க வேண்டுமென்ற நிலையில் அதனாற்தான் நடந்தாக வேண்டும்.

இதில் கற்பனைகளுக்கும், பொய் புளுகுகளுக்கும், விதண்டா வாதங்களுக்கும், முற்கற்பிதங்களுக்கும் , மனோரம்யங்களுக்கும் இடமில்லை. அப்படி இருக்கிறது என்று யாரும் சொல்வார்களேயானால் அவர்கள் தமிழ் மக்களை அழித்தொழிக்க எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து இருக்கிறார்கள் என்பதே அர்த்தம்.

சர்வதேச உறவுகள் பற்றிய சிந்தனைப் பரம்பரியம் வளர்ச்சியடையாத நிலையில் காணப்படும் தமிழ்த் தலைவர்கள் பலரின் மத்தியில் இன்றும் பழகிப் போய்விட்ட பனிப்போர் காலக் கண்ணோட்டம்தான் பெரிதும் காணப்படுகிறது. ஆனால் சர்வதேச உறவுகள் பல அடுக்கு மாற்றங்களை அடைந்துள்ளன.

1987 ஆம் ஆண்டு இலங்கை — இந்திய ஒப்பந்தம் நிகழ்ந்ததும் இந்திய இராணுவம் நுழைந்ததும் பனிப் போர் காலத்தில் நிகழ்ந்தன. அதேபோல இந்திய. இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேறியது பனிப்போர் முடிவுக்குவந்த காலத்தில். அதாவது பனிப் போர் கால இருதுருவ அரசியல் முடிந்து ஒற்றை மைய உலக அரசியல் தொடங்கிய போது ஆப்கானிஸ்தானைவிட்டு சோவியத் இராணுவம் வெளியேறியது; இலங்கையைவிட்டு இந்திய இராணுவம் வெளியேறியது. அதாவது ஒற்றை மைய உலக அரசியலில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவமானது முனை மழுங்கிப்போன கட்டத்தில் இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேறும் தீர்மானத்தை இந்தியாவால் இலகுவாக எடுக்கக்கூடியதாய் இருந்தது.

தற்போது இன்னொரு வகையில் அமெரிக்காவையும் சீனாவையும் இரு துருவங்களாகக் கொண்ட இரு துருவ அரசியல் முளைவிட்டுள்ள நிலை காணப்படுகிறது. இதனால் முன் எப்போதையும்விட. தற்போது இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் பெரிதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச அரசியலை சரிவர பகுத்தும், வகுத்தும், தொகுத்தும் பார்க்கவல்ல சிந்தனை ஓட்டமும் சிந்தனை வீச்சும் தமிழ்த் தரப்புக் அவசியம். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்த் தலைவர்கள் பலரும் ஏதோ மந்திரக் கோலை வைத்திருக்கும் பாணியில் நின்றுகொண்டு அரசியல் அரங்கில் வித்தை காட்டும் துயரமே நீடிக்கின்றது.

எப்படியோ கொரோனாவின் பின்னான கால சர்வதேச உறவுகள் நிச்சயமாக தமிழீழ விடுதலைக்கு வாய்ப்பான நிலைமைகளை பெருமளவு தோற்றுவித்துள்ளன. அதனைக் கையாளத் தேவையான கண்ணோட்டமும், திடசித்தமும், அர்பணிப்பு அயராத உழைப்பும் அவசியம்.. அப்படி அல்லாத , கட்டுப்பெட்டித்தனமான , சிறுபிள்ளைத்தனமான , வரண்டவாதப் போக்குகளை தமிழ்த் தலைவர்கள் பின்பற்றுவார்களேயானால் அவர்கள் எதிரிகளின் செல்லப் பிள்ளைகளே.