கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகிய பிரபல டிவி நடிகை…மருத்துவமனையில் அனுமதி!

0
91

கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து பிரபல டிவி நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகை மிரட்டும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நான்கு மாதங்களாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் கட்டுக்குள் நிற்கவில்லை கொரோனா.

அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்தியாவில், பாதிப்பு எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் கொரோனா பாதிப்புக்கு அதிக இலக்காகி உள்ளன. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் இந்த மாநிலங்களில் உள்ளன. இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பல சினிமா நடிகர்கள், நடிகைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அமிதாப், அபிஷேக் பச்சன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா ராயும் அவர் மகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டிவி நடிகை ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியில், தொடி தொடி சி மன்மானியன் படத்தில் நடித்தவர் சிரேனு பரிக் (Shrenu Parikh). குஜராத்தி படங்களிலும் நடித்துள்ள இவர், ஏராளமான இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த தில் போலே ஒபராய், இஷ்க்பாஸ் ஆகிய தொடர்கள் கவனிக்கப்பட்டன. இதன் மூலம் அவர் அதிகம் பிரபலம் அடைந்தார்.

இவர், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ‘சில நாட்களுக்கு முன் இந்த தொற்று என்னைத் தாக்கியது. அதனால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளேன். எனக்காகவும் என் குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். இந்த கடினமான காலகட்டத்திலும் கொரோனா நோயாளிகளை இரக்கத்துடன் நடத்தும் அனைத்து கொரோனா வாரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மிகவும் கவனமாக இருந்தபோதும் இந்த கண்ணுக்குத் தெரியாத அரக்கன் போன்ற இந்த வைரஸை நினைத்துப் பாருங்கள். தயவு செய்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். இன்னும் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நண்பர்களும் நெட்டிசன்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இஷ்க்பாஸ் தொடரில் நடித்த அதிதி குப்தாவும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.