கொரோனா தொடர்பில் புதிய தீர்மானம் நாளை…

0
151

இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள மற்றும் முடக்கப்படாத பிரதேசங்கள் குறித்து நாளைய தினம் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா அச்சம் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகள் என்பவற்றில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணக்கை தொடர்பில் வார இறுதி நாட்களில் மதிப்பிட்டு தனிமைப்படுத்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகளில் எவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என்பதை வார இறுதி நாட்கள் வரை மதிப்பிட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் குறித்து தீர்மானிக்கப்படும்.

அத்தோடு அடுத்த வாரமளவில் முடக்கப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய ஞாயிற்றுக்கிழமை காலை தனிமைப்படுத்தல் குறித்த தீர்மானத்தை எடுக்கக் கூடியதாக இருக்கும்.

அட்டலுகம பிரதேசத்தில் முதலாவதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதே அந்த பிரதேசம் அபாயம் மிக்கது என்றும் , அங்குள்ள மக்கள் இதனை விட கூடுதலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தோம்.

அங்குள்ள மக்கள் முதலாவது தினத்திலேயே எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இப்போதாவது அப்பகுதி மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்காவிட்டால் அட்டலுகம பிரதேசத்தை நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

குறித்த ஒரு பிரதேசத்தினால் முழு களுத்துறை மாவட்டத்துக்கும் அபாயம் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

இவ்வாறு ஒரு சிலர் பொறுப்பற்று செயற்படுகின்ற போதிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் உள்ள மக்கள் எமக்கு பாரியளவில் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர்.

இவ்வாரம் தொடர்மாடி குடியிருப்பொன்றில் மேற்கொள்ளப்பட்ட 300 பிசிஆர் பரிசோதனைகளில் 4 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான இடங்கள் காணப்படுமாயின் அவற்றை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியும் என்றார்.