சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும், தமிழர்களுக்கு ஒரு சட்டமும்! குற்றச்சாட்டு

0
15

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரை நிலமாகக் காணப்படுகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தின் பிரச்சினை தொடர்பில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும், எமது தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமுமாக இரு விதமான சட்டங்கள் இருப்பதாகவே எங்களுக்குத் தோணுகின்றது.

அப்பிரதேசத்தில் இருந்து கால்நடைகள் விரட்டியடிக்கப்பட்டமையினால் எமது விவசாய நிலங்களில் மாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றால் எமது பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களும், பயிர்களும் அழிவடைந்துள்ளன என ஏறாவூர்ப்பற்று மற்றும் கோரளைப்பற்று தெற்கு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச கமநல கேந்திர நிலைய விவசாய அமைப்புகள் மற்றும் கோரளைப்பற்று தெற்கு கமநல கேந்திர நிலைய விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில் சிறுதேன்கல், வந்தாறுமூலை, தரவை, ஈரளக்குளம், சின்னத்துறைச்சேனை உட்பட பல கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மாதவணை, மயிலத்தமடு பிரதேசத்தில எமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து எமது கால்நடைப் பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்த்து வருகின்றார்கள்.

தற்போது மகாவலி என்ற பெயரிலே சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இங்கு எமது கண்முன்னே எமது கால்நடை வளர்ப்பாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்டும், கால்நடைகள் கொல்லப்பட்டும் வருகின்றன.

இது தொடர்பில் அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர், பொலிஸார் போன்றோரினூடாக முறைப்பாடுகள் செய்தும் அவை அவர்களுக்குச் சாதகமாகத் தான் இருக்கின்றனவே தவிர எமது பண்ணையாளர்களுக்கோ, விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் பயக்கவில்லை.

அப்பிரதேசத்தில் இருந்து கால்நடைகள் விரட்டியடிக்கப்பட்டமையினால் எமது விவசாய நிலங்களில் மாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றால் எமது பல நூற்றுக் கணக்கான விவசாய நிலங்களும், பயிர்களும் அழிவடைந்துள்ளன.

தற்போது இந்த நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விடயங்களைப் பார்த்தால் தமிழ் மக்களாகிய நாங்கள் மிகவும் மனவேதனையுடனும், கவலையுடனும் வாழ வேண்டிய நிலையில் உள்ளோம்.

தற்போது எமது மாவட்டத்தின் எல்லைப்புற பிரதேசமாகவும், எமது பண்ணையாயளர்களின் பாரம்பரிய மேய்ச்சற்தரை நிலமாகவும் காணப்படுகின்ற மயிலத்தமடு , மாதவணை பிரதேசத்தின் பிரச்சினை தொடர்பில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும், எமது தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமுமாக இரு விதமான சட்டங்கள் இருப்பதாகவே எங்களுக்குத் தோணுகின்றது.

ஏனெனில், சாதாரணமாக கூலித்தொழில் செய்யும் ஒரு நபர் கத்தியோ, கோடரியோ அந்தக் காட்டுப் பகுதியில் கொண்டு சென்றால் உடனடியாக அவர் வன இலாகா அதிகாரிகளினால் கைது செய்யப்படடு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

தற்பாது இந்த மயிலத்தமடு பிரதேசத்தில் சுமார் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் காடழிப்பு இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் இது தொடர்பில் சிங்கள இனத்தவரைச் சேர்ந்த எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

எமது விவசாயக் கண்டங்களில் தற்போது கால்நடைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. அங்கு மாடுகள் கட்டப்பட வேண்டும்.

அல்லது விவசாயம் செய்ய வேண்டும். அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெறுகின்ற எமது விவசாய ஆரம்பக் கூட்டங்களிலே விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கால்நடைகளை அதற்கு ஒதுக்கப்பட்ட இடமான மயிலத்தமடு, மாதவணை என்ற இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அங்கே கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சிங்கள் இனத்தவர்கள் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்களை மேற்கொண்டு அச்சமூட்டப்படுகின்றது. அந்த பயம் காரணமாக கால்நடைகள் ஊருக்குள் கொண்டு வரப்படும் போது அவை எமது விவசாய நிலங்களில் மேய்கின்றன.

இதன் காரணமாக எமது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இவை தொடர்பில் நாங்கள் உரியஅரச அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் தங்களின் பதவிகளுக்கு ஏதும் ஆபத்துக்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக இவற்றில் கவனம் செலுத்தவதற்கு முன்வருவதில்லை. இவ்வாறான சிக்கல்களுக்கு மத்தியில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

விவசாயிகள் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்தே விவசாயத்தினை மேற்கொண்டுவருகின்றார்கள். அவ்வாறிருக்கையில் இரவில் யானைத் தொல்லை பகலில் மாடுகளின் தொல்லை என்றால் பாவப்பட்ட விவசாயிகள் என்ன செய்வாhகள். இதில் அதிகாரிகளை நாங்கள் முற்றாகக் குறை சொல்வதாக இல்லை. அவர்கள் அரசாங்கத்தின் கீழ் இயங்குபவர்கள்.

இந்த விடங்களை எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். குறிப்பாக கால்நடை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதில் அதிக கவனம் எடுத்து இப்பிரச்சினைக்குரிய தீர்வினை வழங்க வேண்டும்.

எமது இராஜாங்க அமைச்சரைத் தொடர்பு கொண்டு சந்திப்பதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கித் தரும்படி எமது விவசாயிகள் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரியிருந்தார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கையை, பிரச்சினையை கணக்கெடுப்பதாக இல்லை.

பாலரும் இது தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அனால் தீர்வினைக் காண்பதற்கு எவரும் முனையவில்லை என்பதே உண்மையாகும். இனிவரும் காலத்தில் நாங்கள் விவசாயம் செய்ய வேண்டுமாக இருந்தால் இந்தப் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி உட்பட உரிய அமைச்சர்கள் ஒரு தீர்வினைக் காண வேண்டும். இதற்கு சரியான தீர்வினைக் காணாவிட்டால் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்வதை விட வேறு வழி இருக்காது.

விவசாயம் என்பது நாட்டுக்கு முதுகெலும்பாக இருக்கின்ற விடயம். விவசாயத்தை பல வழிகளிலும் இந்த நாட்டிற்காக முன்னேற்றிச் செல்ல வேண்டும். விவசாயத்தில் தன்நிறைவு காண வேண்டும் என எமது ஜனாதிபதியும் கூட அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

எனவே இந்த விடயத்திற்கு விரைவாக நடவடிக்கை எடுத்துபறிபோய்க்கொண்டிருக்கின்ற பண்ணையாளர்களின் நிலங்களை விடுவித்து அவர்களை அப்பிரதேசத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, எமது பிரதேசத்தில் அந்தக் கால்நடைகளின்பிரச்சினை இல்லாமல் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.