சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவில் இருவர் கைது!

0
8

அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் குடிமகனான ஜுன் வீ இயோ என்பவர், அமெரிக்காவில் உள்ள தனது அரசியல் ஆலோசனை மையம் மூலம் சீன உளவு அமைப்புக்காகத் தகவல்களைத் திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை, நீண்ட விசாரணைக்கு பின்னர் தற்போது ஜுன் வீ இயோ ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேபோல, சீன இராணுவத்துடன் தொடர்புடைய மற்றொரு ஆய்வு மாணவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கைகள் நீண்டு கொண்டிருக்கின்ற நிலையில், அமெரிக்காவில் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வர்த்தகப் போர், கொரோனா தொற்று, ஹொங்கொங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான தொடர்ந்து பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.